இந்தியாவின் அதிநவீன செயற்கைக்கோள் இன்சாட்-4சிஆர், ஜி.எஸ்.எல்.வி.-எஃப்04 விண்கலத்தின் மூலம் வெற்றிகரமாக செலுத்தப்பட்டதை அடுத்து, மேலும் பல விண்ணேற்றங்களுக்கு இஸ்ரோ திட்டமிட்டுள்ளதாக விக்ரம் சாராபாய் விண் மைய இயக்குநர் பி.என். சுரேஷ் கூறியுள்ளார்!
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து திருவனந்தபுரம் விமான நிலையம் வந்தடைந்த பி.என். சுரேஷ் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்திய விண்வெளி ஆய்வுக் கழகம், இந்த ஆண்டின் இறுதிக்குள் மேலும் இரண்டு பி.எஸ்.எல்.வி. விண்கலத்தை ஏவ திட்டமிட்டுள்ளதாகவும், அடுத்த ஆண்டு துவக்கத்தில் ஒரு ஜி.எஸ்.எல்.வி. விண்கலம் ஏவப்படவுள்ளதாகவும் கூறினார்.
ஜி.எஸ்.எல்.வி.-எஃப்04 விண்கலத்தின் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட இன்சாட்-4சிஆர் நல்ல நிலையில் உள்ளது என்று கூறிய இயக்குநர் சுரேஷ், செயற்கைக்கோளை புவி சுழற்சிப் பாதையில் நிலை நிறுத்தும் பணிகள் பெங்களூர் ஹாசனில் உள்ள இஸ்ரோ மையத்தில் இருந்து மேற்கொள்ளப்படும் என்றும், அதற்கான குழு ஏற்கனவே அங்கு சென்றுவிட்டதாகவும் கூறினார்.
கடந்த ஜூலையில் விண்ணில் செலுத்தப்பட்ட ஜி.எஸ்.எல்.வி. தோல்விக்குப் பிறகு, குறுகிய காலத்தில் வெற்றிகரமாக ஜி.எஸ்.எல்.வி. ஏவப்பட்டிருப்பது தாங்கள் மேற்கொண்ட சிறப்பான பணி என்றும் இயக்குநர் பி.என். சுரேஷ் கூறினார்.