தாராப்பூர் புதிய அணு மின் நிலையங்களை தேசத்திற்கு பிரதமர் அர்ப்பணித்தார்!

Webdunia

வெள்ளி, 31 ஆகஸ்ட் 2007 (14:30 IST)
மகாராஷ்ட்ர மாநிலம் தாராப்பூரில் கட்டப்பட்டு இயங்கத் துவங்கியுள்ள 3வது, 4வது அணு மின் நிலையங்களை பிரதமர் மன்மோகன் சிங் தேசத்திற்கு அர்ப்பணித்தார்!

தனித்தனியாக 540 மெகாவாட் மின் திறன் கொண்ட இந்த இரண்டு அணு மின் நிலையங்களின் உற்பத்தி தேச அணு மின் அமைப்புடன் ஒருகிணைக்கப்படுவதன் மூலம் அணு மின் சக்தி உற்பத்தியும், ஒட்டுமொத்த எரிசக்தி உற்பத்தியும் 1,080 மெகாவாட் அளவிற்கு அதிகரிக்கும்.

டாப்ஸ் என்றழைக்கப்படும் தாராப்பூர் அணு சக்தி நிலையங்கள் 3 மற்றும் 4, கடின நீர் அழுத்த மின் உலைகளாகும். இந்திய அணு சக்தித் திட்டத்தின் ஒன்றாவது கட்ட மேம்பாட்டின் அடிப்படையில் கட்டப்பட்டுள்ள இந்த அணு மின் உலைகள், முழுக்க முழுக்க இந்திய தொழில்நுட்ப சார்புடன் மட்டுமே உருவாக்கப்பட்டதாகும்.

அணு மின் நிலையங்களை தேசத்திற்கு அர்ப்பணித்து உரையாற்றிய பிரதமர், எத்தனைத் தடைகள் ஏற்பட்டாலும் இந்தியா சாதிக்கும் என்பதை இந்த திட்டங்கள் நிரூபிக்கின்றன என்று கூறினார்.

பொருளாதாரத்திலும், எரிசக்தி தன்னிறைவிலும் இந்த முன்னேற்றம் குறிப்பிடத்தக்கது என்று கூறிய பிரதமர், ஆண்டிற்கு 9 விழுக்காடு அளவிற்கு பொருளாதார வளர்ச்சியை அடைந்துவரும் இந்தியா போன்ற ஒரு நாட்டிற்கு எரிசக்தி பிரச்சனை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று கூறினார்.

இந்தியா மேற்கொண்டு வரும் 3 கட்ட அணு சக்தி ஆய்வு மற்றும் மேம்பாட்டுத் திட்டத்தில் வேக ஈனுலைகள், தோரியம் அணு மின் உலைகள் இயங்கத் துவங்கும் போது நாம் அணு சக்தி தொழில்நுட்பத்தில் உலகத்தின் முன்னோடிகளாக இருப்போம் என்று கூறினார்.

தாராப்பூர் அணு மின் நிலையம் போன்று கடந்த ஆண்டு ஆகஸ்டிலும், அணு மின் நிலையம் 4, 2005 ஆம் ஆண்டு செப்டம்பரில் இருந்து இயங்கிக் கொண்டிருக்கின்றன.

கடந்த ஜூலை மாதம் வரை இவ்விரு அணு மின் நிலையங்களும் ஒட்டுமொத்தமாக 7,475 மில்லியன் யூனிட் மின்சாரத்தை தயாரித்துள்ளன. இவ்விரு அணு மின் நிலையங்களும் இந்திய அணு சக்தி கழகத்தால் உருவாக்கப்பட்டவை.

தாராப்பூரில் தற்பொழுது இயங்கிவரும் 4 அணு மின் நிலையங்கள் ஒட்டுமொத்தமாக 1,400 மெகாவாட் மின் சக்தியை உற்பத்தி செய்து வருகின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்