நாட்டின் நலனிற்கு அணு ஒப்பந்தம் அவசியம் : விஞ்ஞானிகள்!

Webdunia

வியாழன், 30 ஆகஸ்ட் 2007 (19:50 IST)
நமது நாட்டின் அதிகரித்துக் கொண்டிருக்கும் மின் சக்தி தேவையை நிவர்த்தி செய்யவும், அணு தொழில்நுட்பத்தில் 33 ஆண்டுக்காலமாக இந்தியா தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை முடிவிற்கு கொண்டு வரவும் இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் அவசியம் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்!

பாபா அணு ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கையெழுத்திட்டு இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில், இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை இந்திய மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். அதனை தங்களுடைய அரசியலிற்காக எதிர்க் கட்சிகள் கடத்திச் செல்வதை அனுமதிக்கக் கூடாது என்று கூறியுள்ளனர்.

நமது சமூகத் தேவைகளுக்கான அணு சக்தி ஒத்துழைப்பை ஏதோ ஒரு வணிக பேரம் போல கூறுகின்றனர். அந்த பேரத்தை கையூட்டு பெற்றுக் கொண்டு பிரதமர் முடித்துள்ளதாக இவர்கள் சித்தரிக்கப் பார்க்கின்றனர். சில அரசியல் கட்சிகள் மட்டுமின்றி, ஆட்சிக்கு ஆதரவளித்து வரும் கட்சிகளும் பிரதமரின் நேர்மையை சந்தேகிக்கின்றனர். இது தேசத்திற்கே அவமானமாகும் என்று விஞ்ஞானிகள் அந்த அறிக்கையில் கூறியுள்ளனர்.

இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை எதிர்ப்பவர்கள் ஹென்ரி ஹைட் சட்டத்தைக் காட்டி, எதிர்காலத்தில் அணு குண்டு சோதனை நடத்தினால் ஒப்பந்தம் முறிந்துவிடும் என்றெல்லாம் கூறுகின்றனர். அப்படி ஒன்று எப்பொழுது நடக்கப் போகின்றது? அது எதிர்காலம் என்றால் எப்போது? அப்படிப்பட்ட சோதனையை தேசம் எதிர்பார்த்திருக்கிறதா? என்கின்ற கேள்விகளுக்கெல்லாம் பதிலளிக்கவில்லை என்று அதில் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் அணு உலைத் திட்டக் குழுவின் முன்னாள் தலைவர் ஏ.கே. ஆனந்த் உள்ளிட்ட பல விஞ்ஞானிகள் இதில் கையெழுத்திட்டுள்ளனர்.

இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் வரவேற்கத்தக்கது என்று இந்திய அணு சக்தி ஆணையத்தின் முன்னாள் தலைவர் எம்.ஆர். சீனிவாசன் ஏற்கனவே கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்