அணு ஒப்பந்தம் :அரசு குழுவில் சேர இடதுசாரிகள் நிபந்தனை

Webdunia

வியாழன், 30 ஆகஸ்ட் 2007 (09:43 IST)
இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு குறித்து ஆராய அரசு அமைக்க முன் வந்துள்ள ஆய்வுக் குழுவில் இடம்பெற இடதுசாரிகள் நிபந்தனை விதித்துள்ளனர்.

இந்தியா - அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்து அமெரிக்க நாடாளுமன்றம் நிறைவேற்றிய ஹென்றி ஹைட் சட்டம் மற்றும் அணு சக்தி ஒத்துழைப்பை நடைமுறைக்குக் கொண்டு வர உருவாக்கப்பட்டுள்ள 123 ஒப்பந்தத்தை ஆராயவும், இடதுசாரிகள் உள்ளிட்ட அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஆய்வுக் குழுவை அமைக்க மத்திய அரசு முன் வந்துள்ளது.

இக்குழுவில் தாங்கள் இடம்பெற வேண்டுமெனில் அணு சக்தி ஒத்துழைப்புத் தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கை எதிலும் அரசு ஈடுபடக் கூடாது என்றும், ஆய்வுக் குழு தனது இறுதி அறிக்கையை அளிக்கும்வரை அணு சக்தி ஒத்துழைப்புத் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் இடதுசாரிகள் நிபந்தனை விதித்துள்ளனர்.

தலைநகர் டெல்லியில் நேற்று இரவு நடந்த இடதுசாரிகளின் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டதாக பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தேவபிரதாப் பிஸ்வாஸ், ஏ.பி. பரதன் ஆகியோர் கூறினர்.

இடதுசாரிகளின் இக்கடுமையான நிலைப்பாட்டினால் மத்திய அரசுக்கு மீண்டும் ஒரு நெருக்கடியை இடதுசாரிகள் ஏற்படுத்தியுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்