இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பிற்கு அனுமதி அளித்து அமெரிக்க நாடாளுமன்றம் நிறைவேற்றிய ஹென்ரி ஹைட் சட்டம் குறித்து ஆராய குழு அமைப்பது குறித்து பிரதமர் மன்மோகன் சிங்கும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் ஆலோசனை நடத்தினர்!
அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் தொடர்பாக இடதுசாரிகள் எழுப்பிவரும் சந்தேகங்கள் குறித்து ஆராய ஏற்படுத்தப்படவுள்ள ஆய்வுக் குழு குறித்து நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியும், பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோணியும் கலந்துகொண்டனர்.
நாளை நடைபெறவுள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணி - இடதுசாரி கூட்டணிகளின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இக்குழு அமைப்பது குறித்து அரசு முடிவை அறிவிக்கும் என்று எதிர்பார்ப்பதாக மார்க்சிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவர் சீதாராம் யச்சூரி கூறியுள்ளார்.
அரசியல் ரீதியான குழு அமைக்கப்பட்டு அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் குறித்த கேள்விகளுக்கு விடை காணும் வரை அது தொடர்பான எந்த நடவடிக்கையையும் அரசு மேற்கொள்ளக்கூடாது என்று இடதுசாரிகள் ஏற்கனவே கூறியிருந்தனர்.
இக்குழுவில் இடதுசாரி கட்சிகளின் உறுப்பினர்களுக்கும் இடமளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அரசு அமைக்கும் இக்குழு, ஒரு கால வரையறைக்குள் தனது ஆய்வு முடிவை தெரிவிக்க வேண்டும் என்று வற்புறுத்துவீர்களா என்று கேட்டதற்கு, ஆம் என்று சீதாராம் யச்சூரி பதிலளித்தார்.