தனியார் துறையில் இட ஒதுக்கீடு : மக்களவையில் காரசார விவாதம்

Webdunia

வியாழன், 23 ஆகஸ்ட் 2007 (13:23 IST)
மத்திய - மாநில அரசுத் துறைகளிலும், பொதுத் துறை நிறுவனங்களிலும் அளிப்பது போல தனியார் நிறுவனங்களிலும் தாழ்த்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு அளிப்பது தொடர்பாக ஆளும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே மக்களவையில் கடுமையான வாக்குவாதம் நடந்தது.

கேள்வி நேரத்தின்போது, தேச குறைந்தபட்ச செயல்திட்டத்தில் இப்படி தனியார் துறையிலும், தாழ்த்தப்பட்டோருக்கும், பழங்குடியினருக்கும் இட ஒதுக்கீடு வழங்க ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு உறுதி பூண்டுள்ளது என்று கூறிய சமூக நீதி மற்றும் அதிகாரப்பூர்வமாக்கல் துறையின் அமைச்சர் மீரா குமார் இப்பிரச்சினையில் முந்தைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு செயல்படாததை சுட்டிக்காட்டினார்.

தேச ஜனநாயகக் கூட்டணி அரசு ஆட்சியில் இருந்தபோது தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கான தேச ஆணையம், அவர்களுக்கு தனியார் துறையில் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று தனது ஐந்தாவது அறிக்கையில் பரிந்துரைத்தது என்றும், அதனை 2002ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்ததோடு வாஜ்பாய் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அமைச்சர் மீரா குமார் குற்றம்சாட்டினார்.

மீண்டும் அதே பரிந்துரையை தேச தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் ஆணையம் 2006ல் அளித்தபோது அதனை செயல்படுத்த ஒப்புக் கொண்டு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஏற்றுக் கொண்டதாகக் கூறினார்.

அமைச்சர் அளித்த பதில் திருப்தி அளிக்கவில்லை என்று கூறிய சையத் ஷானவாஸ் உசேன், அவருடைய பேச்சு அரசியலாகவும், முழக்கமாகவும், அவையை முட்டாளாக்குவதுமாகத்தான் உள்ளது என்று கூறினார்.

இதற்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால் அவையில் கூச்சலும், குழப்பமுமாக இருந்த நிலையில் அனைவரையும் அவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி அமைதிப்படுத்தினார்.

ஷானவாஸ் உசேன் சாற்றிய குற்றச்சாட்டிற்கு அமைச்சர் மீரா குமார் பதிலளிக்க முற்பட்டபோது கேள்வி நேரம் முடிந்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்