சஞ்சய் தத் விடுதலையானார்

Webdunia

வியாழன், 23 ஆகஸ்ட் 2007 (12:01 IST)
மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில், சட்டத்திற்குப் புறம்பாக ஆயுதங்கள் வைத்திருந்ததற்காக ஆறாண்டு காலம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட இந்தி நடிகர் சஞ்சய் தத் இன்று காலை எரவாடா சிறையில் இருந்து தற்காலிக பிணையில் விடுவிக்கப்பட்டார்.

ஆகஸ்ட் 1ஆம் தேதி சிறையில் அடைக்கப்பட்ட சஞ்சய் தத்தை, அவருக்கு தண்டனை விதித்த தடா சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவு வராத காரணத்தினால் தற்காலிக பிணையில் விடுதலை செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் மும்பை தடா சிறப்பு நீதிமன்றம் சஞ்சய் தத்திற்கு நேற்று பிணைய விடுதலை அளித்த. பிணையில் விடுவிக்குமாறு நீதிமன்றம் அளித்த உத்தரவுடன் நடிகர் சஞ்சய் தத்தின் வழக்கறிஞர் சதீஷ் மானே ஷிண்டே இன்று காலை எரவாடா சிறைச்சாலையில் நீதிமன்ற உத்தரவை வழங்கினார்.

அதன்பிறகு காலை 7.30 மணிக்கு சஞ்சய் தத் விடுவிக்கப்பட்டார். சிறைச்சாலையில் இருந்து வெளியே வந்த சஞ்சய் தத்தை ஏராளமான ரசிகர்கள் வாழ்த்து முழக்கங்களுடன் வரவேற்றனர். இதில் பெருமளவிற்கு திரண்டிருந்த பத்திரிக்கையாளர்களிடம் எதுவும் பேசாமல் புனே விமான நிலையத்திற்கு வாகனத்தில் பறந்தார் சஞ்சய் தத்.

வெப்துனியாவைப் படிக்கவும்