ரோனன் சென் மன்னிப்புக் கேட்டார்

Webdunia

செவ்வாய், 21 ஆகஸ்ட் 2007 (16:15 IST)
இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக தான் தெரிவித்தக் கருத்துக்கள் தனது சில ஊடக நண்பர்களை குறித்ததுதானேத் தவிர, நாடாளுமன்ற உறுப்பினர்களை அல்ல என்றும், தான் தெரிவித்த கருத்து அவர்களை புண்படுத்தியிருந்தால் அதற்காக அவர்களிடம் மன்னிப்புக் கோருவதாகவும் அமெரிக்காவிற்கான இந்திய தூதர் ரோனன் சென் கூறியுள்ளார்.

அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை எதிர்ப்பவர்கள் தலையற்ற கோழிகளைப் போன்றவர்கள் என்று ரோனன் சென் கூறியதாக இன்று காலை ஒரு அங்கில நாளிதழில் செய்தி வந்ததை அடுத்து, மாநிலங்களவையில் பாஜக இடது சாரி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததை அடுத்து அவை நடவடிக்கைகள் தள்ளிவைக்கப்பட்டன.

இந்த நிலையில் அச்செய்தி பற்றி விளக்கம் அளித்துள்ள தூதர் ரோனன் சென், தலையில்லாத கோழியைப் போல சுற்றி சுற்றி வருகிறார்கள் என்று நான் கூறியிருந்தது எனது சில ஊடக நண்பர்களைத்தான். நிச்சயமாக மதிப்பிற்குரிய நமது நாடாளுமன்றத்தின் உறுப்பினர்களை நான் குறிப்பிடவில்லை. இருந்தாலும் நான் கூறியிருந்தது எந்த விதத்திலாவது அவர்களின் உணர்வுகளை பாதித்திருந்தால் அதற்காக நான் நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்கிறேன் என்று ரோனன் சென் கூறியுள்ளார்.

தான் கூறிய இந்த கருத்துக் கூட வெளியிடுவதற்காக அல்லவென்று சொல்லிக் கூறப்பட்டதுதான் என்றும், அது தனது நிலையேத் தவிர, எந்த விதத்திலும் அரசின் நிலையாகாது என்றும் ரோனன் சென் விளக்கமளித்துள்ளார்.

ரோனன் இவ்வாறு மன்னிப்புக் கோரியதற்குப் பிறகும் அதனை ஏற்க முடியாது என்று கூறியுள்ள பாஜக இடதுசாரிக் கட்சிகள், தூதர் பொறுப்பில் இருந்து அவரை திரும்ப அழைத்துக் கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

(பாஷா)

வெப்துனியாவைப் படிக்கவும்