அணு சக்தி ஒப்பந்தம் : மாநிலங்களவையில் எதிர்ப்பு, தள்ளிவைப்பு

Webdunia

திங்கள், 20 ஆகஸ்ட் 2007 (12:21 IST)
இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை எதிர்த்து 3வது அணிக் கட்சிகளின் உறுப்பினர்கள் தொடர்ந்து முழக்கம் எழுப்பியவாறு இருந்தனர்.

மாநிலங்களவை நடவடிக்கைகள் 15 நிமிட நேரம் தள்ளிவைக்கப்பட்டது.

இன்று காலை அவை துவங்கியதும் சமாஜ்வாடி கட்சி உறுப்பினர்கள் ஜானேஷ்வர் மிஸ்ரா, அமர்சிங் ஆகியோர் அணு ஒப்பந்தத்தை எதிர்த்து முழக்கமிட்டனர். அவர்களோடு பாஜக உறுப்பினர்களும் சேர்ந்து கொண்டனர்.

அவர்களை அமைதிப்படுத்திய அவைத் தலைவரும், குடியரசுத் துணைத் தலைவருமான ஹமீத் அன்சாரி, கேள்வி நேரம் முடிந்ததும் அணு ஒப்பந்தம் குறித்து விவாதித்துக் கொள்ளலாம் என்றார். ஆனால் அதனை ஏற்க மறுத்து அவர்கள் தொடர்ந்து முழக்கமிட்டனர்.

அந்த நேரத்தில் அஇஅதிமுக உறுப்பினர்களும், அவையின் மையப் பகுதிக்கு வந்து அணு ஒப்பந்தத்தை எதிர்த்து முழக்கமிட்டனர். கேள்வி நேரத்தை தள்ளிவைத்துவிட்டு அணு ஒப்பந்தம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அவர்களது கோரிக்கையை ஆதரிப்பதாக பாஜக உறுப்பினர் முரளி மனோகர் ஜோஷி கூறினார்.

இதனால் அவையில் ஏற்பட்ட கூச்சலை அடுத்து அவை நடவடிக்கைகளை 15 நிமிட நேரம் தள்ளிவைப்பதாக அவைத் தலைவர் அறிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்