ஃபெர்னாண்டஸிற்கு எதிர்ப்பு : மாநிலங்களவை திங்கள் வரை தள்ளிவைப்பு!

Webdunia

வெள்ளி, 17 ஆகஸ்ட் 2007 (19:39 IST)
அணு சக்தி ஒப்பந்தப் பிரச்சனையில் பிரதமர் மன்மோகன் சிங் நாடாளுமன்றத்திற்கு துரோகம் செய்துவிட்டார் என்று மத்திய முன்னாள் அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் தெரிவித்த கருத்தைக் கண்டித்து காங்கிரஸ் உறுப்பினர்கள் உருவாக்கிய அமளியால் மாநிலங்களவை நடவடிக்கைகள் திங்கட்கிழமை வரை தள்ளிவைக்கப்பட்டது!

"இதுவே சீனாவாக இருந்தால் ஒரே ஒரு குண்டை அவரது தலையில் செலுத்தி விஷயத்தை முடித்திருப்பார்கள்" என்று ஜார்ஜ் பெர்னாண்டஸ் தான் வெளியிட்டிருந்த அறிக்கையில் கூறியிருந்ததாகக் கூறிய காங்கிரஸ் உறுப்பினர்கள், அதற்காக அவரை கைது செய்ய வேண்டும் என்று முழக்கமிட்டனர்.

மாநிலங்களவையின் மதிப்புமிக்க உறுப்பினர்களில் ஒருவரான பிரதமர் குறித்து ஃபெர்னாண்டஸ் கூறிய கருத்துக்களுக்கு எதிர்க்கட்சிகளும் கண்டனம் செய்ய வேண்டும் என்று நாடாளுமன்ற விவாகாரத்துறை துணை அமைச்சர் சுரேஷ் பச்சோரி பேசினார்.

இப்பிரச்சனையில் எதிர்க்கட்சித் தலைவர் ஜஸ்வந்த் சிங் அறிக்கை தாக்கல் செய்ய மாநிலங்களவை துணைத் தலைவர் ரஹ்மான் கான் அனுமதி அளித்தார். ஆனால், காங்கிரஸ் உறுப்பினர்களின் தொடர் முழக்கத்தால் அவரால் பேச முடியாத நிலை ஏற்பட்டதையடுத்து, அவை நடவடிக்கைகளை திங்கட்கிழமை காலை 11 மணி வரை தள்ளிவைப்பதாக ரஹ்மான் கான் அறிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்