அணு ஆயுத சோதனை நடத்தும் உரிமை உள்ளது : பிரணாப் முகர்ஜி

Webdunia

வியாழன், 16 ஆகஸ்ட் 2007 (16:16 IST)
இந்தியாவின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு எதிர்காலத்தில் அணுச் சோதனை நடத்துவது என்பது நமது இறையாண்மைக்கு உட்பட்ட உரிமை என்று மக்களவையில் அரசு உறுதியாக தெரிவித்துள்ளது!

இன்று காலை முதல் பிற்பகல் 2 மணி வரை பிரதமரை எதிர்த்து எதிர்க்கட்சிகள் நடத்திய அமளியால் தள்ளி வைக்கப்பட்ட மக்களவை, மீண்டும் கூடியபோது அரசின் நிலையை விளக்கி அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஓர் அறிக்கையை வெளியிட்டார்.

"இந்தியாவில் தேச நலனைக் கருத்தில் கொண்டு எதிர்காலத்தில் அணு ஆயுதச் சோதனை நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டால் அதைச் செய்யும் உரிமை நமது இறையாண்மைக்கு உட்பட்டது. அணு ஆயுதச் சோதனைக்கு எதிராக தற்போதுள்ள ஒரே தடை இதற்கு முந்தைய அரசு அறிவித்த தன்னிச்சையான சுயக்கட்டுப்பாடாகும் (unilated moratorium) அதனை இந்த அரசும் கடைபிடிக்கிறது" என்று பிரணாப் முகர்ஜி கூறினார்.

பிரணாப் முகர்ஜி அறிக்கையை படித்துக் கொண்டிருந்த போது எதிர்க்கட்சி உறுப்பினர் அணு ஒப்பந்தத்தை திரும்பப் பெறு என்று முழக்கமிட்டவாறே இருந்தனர்.

இடது சாரி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். ஆயினும் அறிக்கையை தொடர்ந்து படித்த பிரணாப் முகர்ஜி, அமெரிக்காவுடனான இந்த ஒப்பந்தம் அமைதி தேவைகளுக்கு அணு சக்தியை பயன்படுத்துவது தொடர்பான ஒத்துழைப்பு மட்டுமே. இதில் அணு ஆயுத சோதனை குறித்து எந்த குறிப்பும் இல்லை என்றும் கூறினார்.

எரிபொருள் வழங்கல் உறுதிபடுத்தப்பட்டுள்ளது

"இந்த இரு தரப்பு ஒப்பந்தத்தின் பிரிவுகள் 5 முதல் 14 வரை இந்தியாவின் அணு உலைகளுக்கு தொடர்ந்து எரிபொருள் வழங்குவது பற்றியே விவரங்களையே பேசுகிறது. அதாவது, தொடர்ந்து அணு எரிபொருள் வழங்குவது, அது தொடர்பாக ஏதேனும் சிக்கல் எழுமெனில் அதனை திருத்திக் கொள்ளவும், ஒரு வேளை அணு சக்தி ஒத்துழைப்பை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டால் இந்தியாவின் அணு உலைகளுக்கு தேவையான அளவுக்கு எரிபொருளை சேமித்து வைத்துக் கொள்ளவும் வழிகாணப்பட்டுள்ளது" என்று பிரணாப் முகர்ஜி கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்