நமது ராணுவ சுதந்திரத்தை அணு ஒப்பந்தம் கட்டுப்படுத்தவில்லை - பிரதமர்!

Webdunia

திங்கள், 13 ஆகஸ்ட் 2007 (22:00 IST)
இந்திய - அமெரி்க்க அணு சக்தி ஒத்துழைப்பை உறுதிபடுத்தும் 123 ஒப்பந்தம், நமது அணு ஆயுதம் உள்ளிட்ட ராணுவ சுதந்திரத்தையோ அல்லது அயலுறவுக் கொள்கையில் சுதந்திரமாக முடிவெடுக்கும் நமது உரிமையையோ எந்தவிதத்திலும் கட்டுப்படுத்தவில்லை என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்!

மக்களவையில் 123 ஒப்பந்த வரைவின் மீது அரசின் நிலைப்பாட்டை விளக்கி அறிக்கையொன்றை தாக்கல் செய்த மன்மோகன் சிங், எதிர்காலத்தில் நமது பாதுகாப்புச் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு அணு ஆயுதச் சோதனை நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டால் அதனை எந்தவிதத்திலும் இந்த ஒப்பந்தம் கட்டுப்படுத்தாது என்று கூறினார்.

எதிர்காலத்தில் அணு ஆயுதச் சோதனை நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டால் அது நமது சொந்த, சுதந்திரமான முடிவாக இருக்கும் என்று மன்மோகன் சிங் கூறினார்.

அரை மணி நேரம் பிரதமர் மன்மோகன் சிங் அறிக்கை படித்தபோது பா.ஜ.க. உறுப்பினர்கள் தொடர்ந்து எதிர்ப்பு முழக்கமிட்டபடியே இருந்தனர்.

ராணுவ ரீதியிலான நமது திட்டங்களையோ அல்லது திறனையோ இந்த ஒப்பந்தம் எந்தவிதத்திலும் கட்டுப்படுத்தவோ, தடுக்கவோ இல்லை. நமதுநாட்டின் எரிசக்தித் தேவையைக் கருத்தில் கொண்டு நாம் மேற்கொண்டு வரும் 3 கட்ட அணு சக்தி மேம்பாட்டுத் திட்டம் எந்தவிதத்திலும் சமரசம் செய்துகொள்ளப்படவில்லை என்று மன்மோகன் சிங் கூறினார்.

பயன்படுத்தப்பட்ட எரிபொருளை மறு ஆக்கம் செய்யும் நமது உரிமை நிரந்தரமானது. அது தொடர்பாக நாம் உருவாக்கியுள்ள தொழில்நுட்பம் அனைத்தும் அறிவுச் சொத்துரிமை பெறப்பட்டுள்ளது. எனவே, அதற்கெல்லாம் எந்த ஆபத்தும் இல்லை என்று பிரதமர் கூறினார்.

நாம் உருவாக்கியுள்ள இந்த ஒப்பந்தம், நமக்கும், உலகத்திற்கும் சிறந்தது. அது உண்மை என்பதை வரலாறு மதிப்பீடு செய்யும். இன்றைக்கு செய்துகொள்ளப்படவுள்ள இந்த ஒப்பந்தத்தை எதிர்காலம் மதிப்பிடட்டும். நமது நாட்டின் பொருளாதார வளத்தை மேம்படுத்த இந்த ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டுள்ளது. இதில் நமது சுதந்திரமான அயலுறவுக் கொள்கை வகுக்கும் உட்பட எதுவும் சமரசம் செய்துகொள்ளப்படவில்லை என்று கூறிய பிரதமர், நாடாளுமன்றத்தில் 2006 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலும், 2005 ஆம் ஆண்டு ஜூலையில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையிலும் ஒப்புக்கொள்ளப்பட்டது மட்டுமே இந்த ஒப்பந்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்று கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்