123 ஒப்பந்த எதிர்ப்பில் மாற்றமில்லை : காரத்!

Webdunia

திங்கள், 13 ஆகஸ்ட் 2007 (10:53 IST)
இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பை நடைமுறைக்கு கொண்டுவர உருவாக்கப்பட்டுள்ள 123 ஒப்பந்தத்தை எதிர்ப்பதில் எந்த மாற்றமும் இல்லை என்று மார்க்சிஸ்ட் தலைவர் பிரகாஷ் காரத் கூறியுள்ளார்!

திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பிரகாஷ் காரத், அமெரிக்காவுடனான உறவில் பிரதமர் மன்மோகன் சிங் மிகவும் உணர்ச்சிப்பூர்வமாகப் பார்க்கிறார். ஆனால் இந்த விவகாரம் உணர்ச்சிப்பூர்வமானது அல்ல. மாறாக, மிக ஆழமான பிரச்சனையாகும் என்று கூறினார்.

123 ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் இடதுசாரிகள், ஆட்சிக்கு அளித்து வரும் ஆதரவை விலக்கிக்கொள்வதாக முடிவெடுத்தால் அதனைச் செய்யட்டும் என்று பிரதமர் கூறியது பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு, ஆட்சியை நடத்த விரும்புகின்றீர்களா என்கின்ற கேள்வியை காங்கிரசாரிடம் கேட்க வேண்டும் என்று பிரகாஷ் காரத் பதிலளித்தார்.

குறைந்தபட்ச வேலைத் திட்டத்தின் அடிப்படையில்தான் ஆட்சிக்கு இடதுசாரிகள் ஆதரவளித்து வருகின்றனர். அத்திட்டத்தில் அமெரிக்காவுடன் ராணுவ ரீதியிலான உறவு கொள்வது பற்றி எதுவுமில்லை என்று இல்லை பிரகாஷ் காரத் கூறினார்.

நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ள விவாதத்தில், இந்த விவகாரத்தில் அரசிற்கு பெரும்பான்மை ஆதரவு இல்லை என்பது நிரூபணமாகும் என்று காரத் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்