இந்தியா - அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதில் இருந்து பின்வாங்க முடியாது. இதற்காக ஆட்சிக்கு அளித்து வரும் ஆதரவை விளக்கிக் கொள்ள இடது சாரிகள் முடிவெடுத்தால் அதனை செய்யட்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கடுமையாக கூறியுள்ளார்.
கொல்கட்டாவில் இருந்து வெளிவரும் தி டெலிகிராஃப் நாளிதழுக்கு பேட்டியில், இந்தியா - அமெரிக்கா அணு சக்தி ஒத்துழைப்பை நடைமுறைக்குக் கொண்டு வருவது தொடர்பாக உருவாக்கப்பட்ட 123 ஒப்பந்தத்தின் மீது மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த இயலாது என்று இடதுசாரிகளிடம் தான் தெளிவுபடுத்திவிட்டதாகக் கூறியுள்ளார்.
"அணு சக்தி ஒத்துழைப்பு குறித்து இதற்கு மேல் பேச்சுவார்த்தைக்கு இடமேதுமில்லை. இதனை இடதுசாரிகளிடம் தெளிவாக கூறிவிட்டேன். இந்த ஒப்பந்தம் மிகக் கெளரவமானது. அதனை அமைச்சரவை ஏற்றுக் கொண்டுள்ளது. அந்த நிலையில் இருந்து பின்வாங்க முடியாது. அவர்கள் என்ன செய்ய நினைக்கின்றார்களோ அதனை செய்யலாம். ஆட்சிக்கு அளித்து வரும் ஆதரவை திரும்பப் பெறுவது என்று முடிவெடுத்தால் அதனை செய்யட்டும்" என்று மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைமையிலான மன்மோகன் சிங் அரசு இடது சாரிக் கட்சிகளைச் சேர்ந்த 64 உறுப்பினர்களின் ஆதரவினால்தான் பெரும்பான்மையுடன் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
123 ஒப்பந்தத்தை கைவிடவில்லை என்றால் மத்திய அரசு அதற்கு கடுமையான விலை கொடுக்க வேண்டும் என்றும் இடதுசாரித் தலைவர்கள் பிரகாஷ் காரத்தும், ஏ.பி. பரதனும் கூறியிருந்த நிலையில் பிரதமர் அவர்களுக்கு இவ்வாறு காட்டமாக பதில் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.