பாகிஸ்தானில் அவசர நிலையைப் பிரகடனம் செய்ய அதிபர் ஜென்ரல் பர்வேஸ் முஷாரஃப் முடிவு செய்துள்ளார் என்று பரவலாக கருதப்படும் நிலையில், அவசர நிலை பிரகடனம் செய்யப்படுமா என்பது இன்று மாலை தெரியும் என்று ஆளும் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் - க்யூ பிரிவின் சுஜாத் ஹூசேன் கூறியுள்ளார்.
பாகிஸ்தானில் ராணுவச் சட்டத்தைப் பிரகடனம் செய்வது என்ற திட்டம் ஏதும் இல்லை என்று அந்நாட்டு அரசு உறுதியாக கூறியிருந்தாலும், அவசர நிலையை பிரகடனம் செய்வது குறித்து ஆலோசித்து வருவதாக இஸ்லாமாபாத் செய்திகள் கூறுகின்றன.
பாகிஸ்தானில் தற்பொழுது நிலவும் சட்டம் ஒழுங்கு நிலையை முறைபடுத்துவதற்காக அவசர நிலை பிரகடனம் செய்வது குறித்து அதிபர் முஷாரஃப் ஆலோசித்து வருவதாகவும், எனவே அம்முடிவு அரசியல் கட்சிகளை ஒடுக்குவதற்காக அல்ல என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இஸ்லாமாபாத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-க்யூ தலைவர் சுஜாத் ஹூசேன், அவசர நிலை பிரகடனம் செய்யப்படுவது தொடர்பாக எந்த முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை என்றும், இன்று மாலை 4 மணிக்கு அவசர நிலை உண்டா இல்லையா என்பது தெளிவாகிவிடும் என்றும் கூறியுள்ளார்.
அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டால் அதற்கு ஒப்புதல் வழங்க அடுத்த 3 நாட்களுக்குள் பாகிஸ்தான் தேச சட்டசபையும், பிரதிநிதிகள் சபையும் கூட்டப்படும் என்று ஹூசேன் கூறியுள்ளார்.
தனது இல்லத்தில் பாகிஸ்தான் தேச சட்டப் பேரவையின் மகளிர் உறுப்பினர்களைச் சந்தித்த சுஜாத் ஹூசேன், அவர்களிடம் அவசர நிலை பிரகடனம் செய்யப்படும் என்று கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.