இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பை நடைமுறைக்கு கொண்டுவரும் 123 ஒப்பந்த வரைவை மறுபரிசீலனை செய்யும் பேச்சுக்கே இடமில்லை என்ற பிரதமர் மன்மோகன் சிங் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
ஆனால், இது தொடர்பாக இடது சாரிகளின் அனைத்து சந்தேகங்களுக்கும் தாம் விளக்கம் அளிக்கப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பை நடைமுறைக்கு கொண்டுவரும் 123 ஒப்பந்தத்தை ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவளித்துவரும் இடதுசாரி கூட்டணி நிராகரிப்பதாக அறிவித்தது.
டெல்லியில் நேற்று நடந்த இடதுசாரி கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் காரத் இதனைத் தெரிவித்தார்.
இந்நிலையில, இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒத்துழைப்பை நடைமுறைக்கு கொண்டு வரும் 123 ஒப்பந்தம் மத்திய அமைச்சரவையின் ஒப்புதலை பெற்றிருப்பதால், அதில் மறு பலிசீலனை என்ற கேள்விக்கே இடமில்லை என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்திருப்பதாக பிரதமர் அலுவலக வட்டாராங்கள் கூறுகின்றன.
இதனிடையே, நாளை மறுநாள் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குகிறது. செப்டம்பர் 24 ஆம் தேதி வரை நடைபெறும் இக்கூட்டத்தொடரில் வருகிற 13 ஆம் தேதி 123 ஒப்பந்தம் வரைவு தொடர்பான அனைத்து கேள்விகளுக்கும் விளக்கம் அளிக்கப்போவதாக பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.