ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., மருத்துவம் உள்ளிட்ட மத்திய அரசின் உயர் கல்வி நிலையங்களில் இந்த கல்வியாண்டில் இருந்து இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கு விதித்த தடையை விலக்கிக்கொள்ள உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது!
கடந்த மார்ச் மாதம் 29 ஆம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அரிஜித் பசாயத், லோகோஷ்வர் பாண்டா ஆகியோர் கொண்ட நீதிமன்றக் குழு, பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டிற்கு எதிரான வகை செய்யும் சட்டத்திற்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டுள்ள நிலையில், இந்த கல்வியாண்டு முதலே இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதற்கு இடைக்காலத் தடை விதித்தது.
இந்தத் தடையை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த மனுவின் மீது வாதிட்ட அரசு வழக்கறிஞர் ஜி.இ. வாகனவதி, உச்ச நீதிமன்றத்தின் தடையால் இந்திய மக்களில் பெரும்பான்மையிராக உள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படும் நிலை ஏற்படும் என்றும், சமூக நீதியை நிலைநிறுத்துவது என்கின்ற அரசின் கொள்கையின் அடிப்படையிலேயே இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்க முடிவு செய்யப்பட்டது என்றும் வாதிட்டார்.
இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு அளிப்பதால் பொதுப்பிரிவு மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் இடங்களின் எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்ட பின்னரே ஒதுக்கீடு வழங்கப்படுவதாகவும் வழக்கறிஞர் வாகனவதி வாதிட்டார்.
மத்திய அரசின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்றும், இவ்வழக்கில் இறுதித் தீர்ப்பு அளிக்கப்படும் வரை இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தாவிட்டால் அதனால் வானம் ஒன்றும் இடிந்துவ விழுந்துவிடாது என்றும், ஏற்கனவே அவர்கள் 55 வருடங்கள் காத்திவிட்டார்கள், மேலும் ஒரு வருடம் காத்திருப்பதால் ஒன்றும் ஆகிவிடாது என்றும் இட ஒதுக்கீட்டை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் சார்பாக வாதிட்ட வழக்கறிஞர்கள் வாதம் செய்தனர்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிஷ்ணன், நீதிபதிகள் அரிஜித் பசாயத், சி.கே. தாக்கர், ஆர்.வி. ரவீந்திரன், தல்வீர் பண்டாரி ஆகியோர் கொண்ட நீதிமன்றக் குழு, மத்திய அரசின் பதில் மனுவை முழுமையாக ஆராய்ந்ததாகவும், ஏற்கனவே அளிக்கப்பட்ட உத்தரவை மாற்றுவதற்கு தாங்கள் விரும்பவில்லை என்றும் தங்களது உத்தரவில் கூறிவிட்டனர்.
எனவே, இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் சட்டத்திற்கு எதிரான வழக்குகளின் மீது விசாரணை நடைபெற்று இறுதித் தீர்ப்பு வழங்கப்படும் வரை இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வராது.