இட ஒதுக்கீடு : இடைக்கால தடையை நீக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

Webdunia

புதன், 8 ஆகஸ்ட் 2007 (11:53 IST)
மத்திய அரசின் உயர் கல்வி நிலையங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இந்தக் கல்வியாண்டில் இருந்தே 27 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிப்பதற்கு விதிக்கப்பட்ட இடைக்காக தடையை நீக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது.

27 விழுக்காடு இட ஒதுக்கீட்டை இந்தக் கல்வியாண்டில் இருந்தே நடைமுறைக்கு கொண்டு வருவதற்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. இந்த தடையை விலக்கிக்கொள்ளக் கோரி மத்திய அரசு தாக்கல் செய்த மனு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் தலைமையில் நீதிபதிகள் அரிஜித் பசாயத், சி.கே. தாக்கர், ஆர்.வி. ரவீந்திரன், தல்வீர் பண்டாரி ஆகியோர் கொண்ட நீதிமன்றக் குழு இம்மனுக்களை விசாரிக்கிறது.

நேற்றைய விசாரணையில், பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதால், பொதுப்பட்டியல் மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று மத்திய அரசு வழக்கறிஞர் வானதி எடுத்துக் கூறினார்.

பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு எந்த அளவுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுகிறதோ, அந்த அளவுக்கு பொதுப்பட்டியலில் இடங்களின் எண்ணிக்கை உயர்த்தப்படும் என்றும் மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

1931 ஆம் ஆண்டுக்குப் பின்னர், பிற பிற்படுத்தப்பட்டோருக்கான புள்ளிவிவரம் எதுவும் அரசிடம் இல்லாத நிலையில், 27 விழுக்காடு என்ற முடிவுக்கு அரசு வந்தது எப்படி என்று இடஒக்கீடு சட்டத்தை எதிர்ப்போர் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது. நேற்றைய விசாரணை முடிவடைந்த நிலையில், இன்று மீண்டும் விசாரணை தொடங்கியது.

இதில், மத்திய அரசின் உயர் கல்வி நிலையங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இந்தக் கல்வியாண்டில் இருந்தே 27 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிப்பதற்கு விதிக்கப்பட்ட இடைக்காக தடையை நீக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்