நான் சங்கராச்சாரியாரின் பக்தன் : உச்ச நீதிமன்ற நீதிபதி!

Webdunia

திங்கள், 6 ஆகஸ்ட் 2007 (18:40 IST)
"நான் சங்கராச்சாரியாரின் பக்தன் எனவே இந்த வழக்கை விசாரிக்க மாட்டேன்" என்று உச்ச நீதிமன்ற நீதிபதி பி.கே. பாலசுப்பிரமணியன் கூறியதால் ஜெயேந்திர சரஸ்வதி மனு மீதான விசாரணை 3 வாரத்திற்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது!

காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமன் படுகொலை செய்யப்பட்ட வழக்கு விசாரணை புதுச்சேரி அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. அவ்வழக்கு விசாரணையில் தமிழக அரசின் வழக்கறிஞர்கள் ஆஜராகக் கூடாது என்று கூறி இவ்வழக்கில் முக்கியக் குற்றவாளியான காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி மனு செய்ததை விசாரித்த உச்ச நீதிமன்றம், வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்தது. இந்தத் தடையால் புதுச்சேரி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெறவில்லை.

இந்த நிலையில் ஜெயேந்திர சரஸ்வதி மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜி.பி. மாத்தூர், பி.கே. பாலசுப்பிரமணியன் ஆகியோர் கொண்ட அமர்வு மனுவை விசாரித்தது. அப்பொழுது நீதிபதி பி.கே. பாலசுப்பிரமணியன், "நான் சங்கராச்சாரியாரின் (ஜெயேந்திர சரஸ்வதியின்) பக்தன். எனவே இம்மனுவை விசாரிக்க மாட்டேன். புதிய பெஞ்ச் இந்த மனு மீது விசாரணை நடத்தும்" என்று அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து சங்கராச்சாரியாரின் மனு மீதான விசாரணை 3 வாரத்திற்கு தள்ளிவைக்கப்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்