எதிர்காலத்தில் இந்தியா அணுச் சோதனை நடத்தி அதன் காரணமாக இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் முறிந்தாலும், ஒப்புக்கொண்டபடி, இந்தியாவின் அணு உலைகளுக்கு அமெரிக்கா தொடர்ந்து யுரேனியம் எரிபொருளை வழங்கும் என்று 123 ஒப்பந்தத்தில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது!
அமெரிக்க அணு சக்தி சட்டத்தின்படி, அமெரிக்கா எந்தவொரு நாட்டுடனும் அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் செய்து கொண்டிருந்தால் அந்த நாடு ஒப்பந்தத்திற்கு முரணாக அணுச் சோதனை நடத்தினால் அந்தக் கணமே அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் முறிந்துவிடும்.
இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பை நடைமுறைக்குக் கொண்டு வருவதில் பெரும் தடையாக இருந்த அமெரிக்க அணு சக்தி சட்டத்தின் இந்தப் பிரிவில் சமரசம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் படி, அணு சக்தி ஒத்துழைப்பு முறிந்தாலும் சர்வதேச அணு சக்தி கண்காணிப்பு முகமையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்படும் இந்தியாவின் அணு மின் உலைகளுக்கு ஒப்புக்கொண்ட படி தொடர்ந்து யுரேனியம் எரிபொருள் வழங்கப்படும் என்று அமெரிக்கா 123 ஒப்பந்தத்தில் உறுதியாக ஒப்புக் கொண்டுள்ளது.
இந்தியா எதிர்கால பாதுகாப்புச் சூழலைக் கருத்தில் கொண்டு அணுச் சோதனை செய்தாலும் இந்த ஒப்பந்தம் அந்தக் கணமே முறிந்து போகாது. மாறாக, ஒரு நாடு மற்றொரு நாட்டிற்கு ஓராண்டுக்கால முன்னறிவிக்கை செய்ய வேண்டும். அதன் மீது பேச்சுவார்த்தை நடந்த பின்னரே இறுதி முடிவு எடுக்க வேண்டும் என்றும் 123 ஒப்பந்தத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பின் கீழ் நமது அணு உலைகளுக்கு 40 ஆண்டு காலத்திற்கு யுரேனியம் எரிபொருள் வழங்கவும், அதனை மேலும் 10 ஆண்டுகளுக்கு நீட்டித்துக் கொள்ளவும் 123 ஒப்பந்தம் வழி செய்கிறது.
இந்தியாவின் அணு தொழில்நுட்ப மற்றும் எரிபொருள் தேவைகளுக்காக என்.எஸ்.ஜி. என்றழைக்கப்படும் அணு தொழில்நுட்ப அமைப்பு நாடுகளுடன் இந்தியாவின் சார்பாக அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
22 பக்கங்கள் கொண்ட இந்த ஒப்பந்தத்தின் படி, இரண்டு நாடுகளில் எது ஒன்றும் ஒப்பந்தத்தை முறித்துக்கொள்ள முடிவு செய்தால் அதற்கு ஒரு வருடக் கால முன்னறிவிக்கை செய்வது மட்டுமின்றி, எதன் காரணமாக அம்முடிவு எடுக்கப்படுகிறது என்பது குறித்து பரஸ்பரம் விவாதித்துக் கொள்வதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. (பி.டி.ஐ.)