123 ஒப்பந்த விவரம்: இந்தியா, அமெரிக்கா ஒரே நேரத்தில் வெளியிட்டது

Webdunia

வெள்ளி, 3 ஆகஸ்ட் 2007 (12:57 IST)
இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒத்துழைப்பை உறுதி செய்யும் 123 ஒப்பந்தத்தின் விவரங்கள் அடங்கிய அறிக்கை இன்று ஒரே நேரத்தில் இந்தியாவிலும், அமெரிக்காவிலும் வெளியிடப்பட்டது.

அயலுறவு அமைச்சகத்தின் இணைய தளத்தில் 123 ஒப்பந்த வரைவின் முழு விவரம் வெளியிடப்பட்டது. இதேபோல் அமெரிக்க அயலுறவு அமைச்சகமும் ஒப்பந்த விவரத்தை இன்று வெளியிட்டது.

பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் அண்மையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நடைமுறைக்கு கொண்டுவரும் 123 ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

இதையடுத்து, உடன்பாட்டை அமல் செய்வது தொடர்பாக இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள கருத்தொற்றுமை குறித்து முன்னாள் பிரதமர் வாஜ்பாய், முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் ஜஸ்வந்த சிங், யஸ்வந்த் சின்ஹா ஆகியோரிடம் பிரதமர் மன்மோகன் சிங் எடுத்துரைத்தார்.

இந்நிலையில், இந்திய - அமெரிக்க அணுசக்தி உடன்பாடு குறித்து எதிர் கட்சித் தலைவர் அத்வானியிடம் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் நேற்று எடுத்துரைத்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்