123 ஒப்பந்தம் : அத்வானிக்கு நாராயணன் விளக்கம்!

Webdunia

வியாழன், 2 ஆகஸ்ட் 2007 (15:51 IST)
இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பை நடைமுறைக்குக் கொண்டுவரும் 123 ஒப்பந்தத்தின் விவரங்களை எதிர்க்கட்சித் தலைவர் அத்வானியிடம் தேச பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் விளக்கினார்!

123 ஒப்பந்தத்திற்கான முன்வரைவு ஏற்கப்பட்டதை அடுத்து முன்னாள் பிரதமர் வாஜ்பாய், அயலுறவு முன்னாள் அமைச்சர்கள் ஜஸ்வந்த் சிங், யஷ்வந்த் சின்ஹா, பா.ஜ.க. தலைவர்கள் ராஜ்நாத் சிங் ஆகியோருக்கு பிரதமர் மன்மோகன் சிங் கடந்த வாரம் விளக்கினார்.

அந்த சந்திப்பு நடந்தபோது மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் அத்வானி சிங்கப்பூரில் இருந்தார்.

அவரை இன்று சந்தித்த தேச பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன், 123 ஒப்பந்தம் குறித்து விளக்கினார்.

அணு சக்தி ஒத்துழைப்பு குறித்து பாரதிய ஜனதா கட்சிக்கு உள்ள சந்தேகங்களுக்கு அத்வானியிடம் நாராயணன் விளக்கியதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பிரதமரை கடந்த வாரம் சந்தித்ததற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க. தலைவர் யஷ்வந்த் சின்ஹா, 123 ஒப்பந்தத்தின் வரைவை தங்களுடன் அரசு பகிர்ந்துகொள்ளவில்லை என்றும், அது தொடர்பான தங்களுடைய சந்தேகங்கள் முழுமையாக தீர்க்கப்படவில்லை என்றும் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்