மும்பை தொடர் குண்டு வெடிப்பு : மேலும் ஒருவருக்கு மரண தண்டனை!

Webdunia

புதன், 25 ஜூலை 2007 (16:42 IST)
1993 மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றவாளி என்று உறுதி செய்யப்பட்ட மேலும் ஒருவருக்கு மரண தண்டனை விதித்து மும்பை தடா சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது!

1993 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12 ஆம் தேதி மும்பையில் நடந்த தொடர் குண்டு வெடிப்புகளில் 2 இடங்களில் நடந்த குண்டுவெடிப்புகளில் தொடர்புடையதாக குற்றம் நிரூபிக்கப்பட்ட பாவ்லேவிற்கு மரண தண்டனை விதித்து மும்பை தடா சிறப்பு நீதிமன்ற நீதிபதி பி.டி. கோடே தீர்ப்பளித்தார்.

மும்பையில் உள்ள சிவ சேனா தலைமை அலுவலக கட்டடத்திற்கு அருகே உள்ள பெட்ரோல் நிலையத்தில் வாகனத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டுகள் வெடித்ததில், இன்று மரண தண்டனை விதிக்கப்பட்ட பாவ்லே குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டிருந்தார்.

மேலும், ஏர் இந்தியா கட்டடம் அருகே உள்ள ஓமன் வங்கிக்கு எதிரே ஆர்.டி.எக்ஸ். நிரப்பப்பட்ட கார் குண்டு வெடிப்பு வழக்கிலும் பாவ்லேவிற்கு தொடர்பு இருப்பதாக குற்றம் நிரூபிக்கப்பட்டிருந்தது.

இந்த இரண்டு இடங்களிலும் நடந்த குண்டு வெடிப்புகளில் 24 பேர் கொல்லப்பட்டனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

1993 மும்பை குண்டு வெடிப்பில் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்ட 100 பேரில் இதுவரை 92 பேருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இன்று தண்டனை விதிக்கப்பட்ட பாவ்லே உடன் சேர்த்து 11 பேருக்கு மரண தண்டனையும், மேலும் 17 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்