123 ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் : பிரணாப்

Webdunia

புதன், 25 ஜூலை 2007 (13:07 IST)
இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பை நடைமுறைக்குக் கொண்டு வருவதற்கான 123 ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்திய - அமெரிக்கா இடையே அணு சக்தி ஒத்துழைப்பை நடைமுறைக்குக் கொண்டு வரும் தொழில்நுட்ப, பொருளாதார ரீதியிலான இந்த உடன்படிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் மிகப் பெரிய திருப்பு முனையாகும்.

அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த அமெரிக்க அணு சக்தி சட்டத்தின்படி 123 ஒப்பந்தத்தை உருவாக்குவதில் பல தடைகள் ஏற்பட்டது.

அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் நடைமுறைக்கு கொண்டு வர முடியாத அளவிற்கு உருவான சிக்கல்களைக் களைவதற்கு இரு நாடுகளின் உயர்மட்டக் குழுக்களுக்கு இடையே பல முறை பேச்சுவார்த்தை நடந்தது.

கடைசியாக, தேச பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன், இந்திய அயலுறவுச் செயலர் சிவ்சங்கர் மேனன், பிரதமரின் சிறப்புத் தூதர் ஷியாம் சரண், சிங்கப்பூருக்கான இந்திய தூதர் ஜெய்ஷங்கர் ஆகியோர் கொண்ட குழு, அமெரிக்க அயலுறவு அமைச்சகத்தின் அரசியல் விவகாரங்களுக்கான சார்புச் செயலர் நிக்கலாஸ் பர்ன்ஸ் தலைமையிலான குழுவுடன் வாஷிங்டனில் கடந்த வாரம் 4 நாட்கள் பேச்சுவார்த்தை நடத்தியது.

இந்த பேச்சுவார்த்தையில், பயன்படுத்தப்பட்ட யுரேனியம் எரிபொருளை மறு ஆக்கம் செய்து மீண்டும் பயன்படுத்துவதற்கான உரிமை உள்ளிட்ட இந்தியாவின் சில நிபந்தனைகளை அமெரிக்கா ஏற்றுக் கொண்டதை அடுத்து சிக்கல்களுக்கு தீர்வு ஏற்பட்டது.

இந்த நிலையில் 123 ஒப்பந்தத்தின் வரைவை அரசியல் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுவும், பாதுகாப்பிற்கான அமைச்சரவைக் குழுவும் இன்று காலை பரிசீலித்தன.

மிக முக்கியத்துவம் வாய்ந்த இக்கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, 123 ஒப்பந்த வரைவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக கூறினார்.

123 ஒப்பந்தம் தொடர்பாக இந்தியாவிற்கு இருந்த கவலைகள் அனைத்தும் கருத்தில் கொள்ளப்பட்டு உரிய தீர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதாக பிரணாப் முகர்ஜி கூறினார்.

123 ஒப்பந்த வரைவை இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்களுடனும், அதன்பிறகு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி கட்சிகளின் தலைவர்களுடனும், பிறகு எதிர்க்கட்சித் தலைவர்களுடனும் விவாதித்தப் பிறகு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து விவாதிக்கப்போவதாக பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்