மும்பை தொடர் குண்டுவெடிப்பு : மேலும் 3 பேருக்கு மரண தண்டனை!

Webdunia

செவ்வாய், 24 ஜூலை 2007 (16:24 IST)
1993 மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டவர்களில் மேலும் 3 பேருக்கு மரண தண்டனையும், ஒருவருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து மும்பை தடா சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது!

1993 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12 ஆம் தேதி மும்பையில் நடந்த 12 குண்டு வெடிப்புகளில் 257 பேர் கொல்லப்பட்டனர். 700 பேர் காயமுற்றனர். இத்தாக்குதல் சதித் திட்டத்தில் பங்கேற்றது மட்டுமின்றி, பாகிஸ்தான் சென்று ஆயுதப் பயிற்சி எடுத்துக் கொண்டு திரும்பிய பின்னர் முக்கிய குற்றவாளியான டைகர் மேமனுக்கு உதவி புரிந்த குற்றங்கள் உறுதி செய்யப்பட்ட ஜாஹீர் ஹுசேன் ஷேக், ஃபெரோஸ் மாலிக், அப்துல் அக்தார் கான் ஆகிய மூவருக்கு மரண தண்டனை விதிப்பதாக தடா சிறப்பு நீதிமன்ற நீதிபதி பி.டி. கோடே தீர்ப்பளித்தார்.

மும்பை தொடர் குண்டுவெடிப்பின் போது மத்திய மும்பையில் உள்ள மீனவர் காலனியில் கையெறி குண்டு வீசியதாக குற்றம் நிரூபிக்கப்பட்ட மொயின் குரேஷிக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்த நீதிபதி கோடே, கையெறி குண்டு வீச்சிலும் 3 பேர் கொல்லப்பட்டு, 6 பேர் காயமுற்றாலும், அக்குற்றத்தைச் செய்தபோது குரேஷி 18 வயது நிரம்பாதவராக இருந்ததனால் அவருக்கு ஆயுள் தண்டனை மட்டும் விதித்து தீர்ப்பளித்துள்ளதாகக் கூறினார்.

மற்ற மூவருக்கு மரண தண்டனை விதித்தது குறித்து தனது தீர்ப்பில் விளக்கமளித்துள்ள நீதிபதி, பயங்கரவாத நடவடிக்கைகள் ஒரு நாட்டிற்கு எதிரான போரை தொடுப்பதற்கு ஒப்பானதாகும் என்று கூறினார்.

"வன்முறையில் ஈடுபட்டு குற்றவாளி என்று உறுதி செய்யப்படுபவர் தனது வன்முறையால் பாதிக்கப்படுபவரை மனதில் கொண்டு செயல்படுகிறார். ஆனால், பயங்கரவாதம் எனும் இந்த கோழைத்தனமான நடவடிக்கை, எந்தவொரு தனித்த நபரையும் குறிவைக்காமல் ஒட்டுமொத்த சமூகத்திற்கு எதிரான நடவடிக்கையாகிறது" என்று நீதிபதி கோடே கூறினார்.

மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்ட 100 பேரில் இதுவரை 91 பேருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நடிகர் சஞ்சய் தத் உட்பட 9 பேருக்கு இன்னமும் தண்டனை தொடர்பான தீர்ப்பு அளிக்கப்படவில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்