குடியரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி , இடது சாரிகள் வேட்பாளர் பிரதீபா பாட்டீல் மூன்று லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். நாட்டின் முதல் பெண் குடியரசுத் தலைவராக அவர் வருகிற 25 ஆம் தேதி பதவி ஏற்கிறார்.
நாட்டின் 13 வது குடியரசுத் தலைவர் தேர்தல் நேற்று முன் தினம் நடைபெற்றது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி, இடது சாரிகள் சார்பில் பிரதீபா பாட்டீலும், தேசிய ஜனநாயக கூட்டணி ஆதரவுடன் பைரோன்சிங் ஷெகாவத்தும் போட்டியிட்டனர்.
நாடு முழுவதும் நேற்று முன்தினம் நடைபெற்ற வாக்குப்பதிவில் நாடாளுமன்ற உறுப்பினர்களில் 88 விழுக்காடும், சட்டப் பேரவை உறுப்பினர்களில் 91 விழுக்காடும் வாக்களித்தனர். குடியரசுத் தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 11 மணிக்கு எண்ணப்பட்டது.
ஆங்கில எழுத்து வரிசையின்படி மாநில வாரியாக பதிவான வாக்குகள் முதலில் எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கையில் பிரதீபா பாட்டீல் தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தார். வாக்கு எண்ணிக்கையின் முடிவில் பிரதீபா பாட்டீல் 6,38,116 வாக்குகளும், பைரோன்சிங் ஷெகாவத் 3,31,306 வாக்குகளும் பெற்றனர்.
ஷெகாவத்தை விட பிரதீபா பாட்டீல் மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதன் மூலம் நாட்டின் 13 வது முதல் பெண் குடியரசுத் தலைவராக அவர் வருகிற 25 ஆம் தேதி பதவி ஏற்கிறார்.