மும்பை தொடர் குண்டு வெடிப்பு : மேலும் மூவருக்கு மரண தண்டனை

Webdunia

வியாழன், 19 ஜூலை 2007 (16:26 IST)
மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டவர்களில் மேலும் மூன்று பேருக்கு மரண தண்டனை விதித்து பொடா சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

1993 ஆம் ஆண்டு மார்ச் 12 ஆம் தேதி மும்பையில் பல பகுதிகளில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 257 பேர் கொல்லப்பட்டனர். 700 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை மும்பை பொடா சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று 100 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டது. குற்றவாளிகளுக்கு படிபடியாக நீதிபதி கோடே தண்டனை வழங்கி வருகிறார்.

மும்பை குண்டு வழக்கில் முக்கிய குற்றவாளியான டைகர் மேமனின் கூட்டாளிகளான அஷ்கார் முகதம், ஷானவாஸ் குரேசி, முகமது ஷோயிப் கன்சார் ஆகிய மூன்று பேருக்கு இன்று மரண தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது. மும்பையில் பல பகுதிகளில் வெடி குண்டு வைத்து வெடிக்கச் செய்ததில் பலர் கொல்லப்பட்டதால் அவர்களுக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டிருப்பதாக நீதிபதி கோடே தனது தீர்ப்பில் கூறினார்.

ஷானவாஸ் குரேசி மத்திய மும்பையில் உள்ள சினிமா பிளாசாவில் ஆர்டிஎக்ஸ் வெடி மருந்துகள் நிரப்பப்பட்ட வாகனத்தை வெடிக்கச் செய்ததில் 10 பேர் கொல்லப்பட்டனர். 36 பேர் படுகாயம் அடைந்தனர்.

அதேபோல், மற்ற இரண்டு குற்றவாளிகான முகதம், ஷோயிப் கான்சார் ஆகியோர் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள ஷவேரி சந்தையில் வெடி குண்டுகள் நிரப்பப்பட்ட இரு சக்கர வாகனத்தை வெடிக்கச் செய்தனர். இதில் 17 பேர் கொல்லப்பட்டனர், 57 பேர் படுகாயம் அடைந்தனர்.

அப்துல் கனி இஸ்மாயில் துர்க், பர்வேஷ் ஷைக், முகமது முஸ்டாக் தரனி ஆகிய மூன்று பேருக்கு நேற்று மரண தண்டனை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்