முல்லை பெரியாறு பிரச்சனை: பேச்சு வார்த்தைக்கு தயார்: கேரளா அறிவிப்பு

Webdunia

செவ்வாய், 17 ஜூலை 2007 (18:18 IST)
முல்லை பெரியாறு அணை பிரச்சனைக்கு தமிழக அரசுடன் பேச்சு வார்த்தை மூலம் தீர்வுகாண தயாராக இருப்பதாக கேரள அரசு தெரிவித்துள்ளது.

முல்லை பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்த வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தியது. இதனை திட்டவட்டமாக மறுத்து வந்த கேரள அரசு முல்லை பெரியாறு அணைக்கு அருகில் புதிய அணை ஒன்றை கட்ட திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், கேரள சட்டப் பேரவையில் காங்கிரஸ் உறுப்பினர் எழுப்பிய கேள்வி ஒன்றிக்கு பதிலளித்த கேரள நீர் வளத்துறை அமைச்சர் ஹேமச்சந்திரன், முல்லை பெரியாறு அணையின் தற்போதைய நிலை குறித்து தமிழக அரசுக்கு மூன்று முறை தெரிவிக்கப்பட்டு விட்டதாகவும், ஆனால் அவர்களிடம் இருந்து இதுவரை எந்தவிதமான பதிலும் வரவில்லை என்றும் அவர் கூறினார்.

முல்லை பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக தமிழகத்திற்கும், கேரளாவிற்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருவதாக தெரிவித்த அவர், இதற்கு தீர்வு காண தமிழக அரசுடன் பேச்சு வார்த்தை நடத்த கேரள அரசு தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்