பயங்கரவாதத்தை முற்றிலுமாக ஒழிக்கவும், போதைப் பொருள் கடத்தலை தடுக்கவும் இணைந்து பணியாற்றுவது குறித்து இந்தியாவும், பாகிஸ்தானும் இன்று பேச்சுவார்த்தையைத் துவக்கியுள்ளன!
இரு நாடுகளுக்கும் இடையே நம்பிக்கை ஏற்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு அங்கமாக நடைபெறும் இந்தப் பேச்சுவார்த்தையில், இந்திய உள்துறை அமைச்சகச் செயலர் மதுகர் குப்தா தலைமையிலான குழுவுடன் பாகிஸ்தான் அரசின் உள்துறை அமைச்சகச் செயலர் சையது கமால் ஷா தலைமையிலான குழுவினர் பேசி வருகின்றனர்.
இந்த இரண்டு நாள் பேச்சுவார்த்தை மிகுந்த பலனளிப்பதாக இருக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சகச் செயலர் கூறியுள்ளார்.
எல்லைத் தாண்டிய பயங்கரவாதத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாக இந்தியாவும், பயங்கரவாதத்தை ஒடுக்குவதில் ஒத்துழைப்பது தொடர்பாக பாகிஸ்தானும் இன்றைய பேச்சுவார்த்தையில் வலியுறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இரு நாடுகளின் மீனவர்கள் விடுதலை, இரு நாடுகளின் சிறைகளில் உள்ள வழக்கு போடப்படாத கைதிகளின் விடுதலை, போதைப் பொருளை கட்டுப்படுத்துவதில் கூட்டு நடவடிக்கை அமைப்பு ஆகியனவும் இந்த பேச்சுவார்த்தையில் இடம் பெற்றுள்ளது.