மிகைப்படுத்தி எதையும் கூறவேண்டாம் : உயர் நீதிமன்றங்களுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை!

Webdunia

சனி, 30 ஜூன் 2007 (15:53 IST)
எந்த வழக்காயினும், எவ்வித அடிப்படையும் இன்றி தேவையற்ற, மிகைப்படுத்தப்பட்ட கருத்துக்களை கூறிட வேண்டாம் என்று உயர் நீதிமன்றங்களுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பெண் ஒருவர் கடத்தப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு பிணைய விடுதலை அளிக்கப்பட்டது தொடர்பான வழக்கை விசாரித்த அம்மாநில உயர் நீதிமன்றம், உத்தரப் பிரதேச அரசிற்கு எதிராக தெரிவித்த கருத்துக்கள் அனைத்தும் அடிப்படையற்றவை, மிகைப்படுத்திக் கூறப்பட்டவை என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

ஒரு கடத்தல் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உத்தரப் பிரதேச மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்று லக்னோ உயர் நீதிமன்ற நீதிபதிகள் கூறியிருந்தனர்.

நீதிபதிகளின் கருத்து அடிப்படையற்றது. மிகைப்படுத்தப்பட்டுள்ளது என்று கூறி அம்மாநில அரசு தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அரிஜித் பசாயத், பி.பி. நெளலேக்கர் ஆகியோர் கொண்ட நீதிமன்றக் குழு, உயர் நீதிமன்ற உத்தரவை படித்துப் பார்த்ததில் அவர்கள் கூறிய பொதுவான, மிகைப்படுத்தப்பட்ட கருத்துக்களுக்கு எவ்வித ஆதாரமும் இருப்பதாகத் தெரியவில்லை என்று கூறினர்.

"கடத்தல் தொடர்பாக காவல் துறையினர் நடத்திய புலனாய்வில் குறையிருப்பதாக எந்தவொரு குற்றச்சாற்றும் இல்லாத நிலையிலும், காவல் துறையினரின் புலனாய்வில் எந்தக் குறைபாடும் இருந்ததாக உயர் நீதிமன்றத்தின் இறுதி உத்தரவில் காணப்படாத நிலையிலும், காவல் அதிகாரிகளுக்கு எதிராக அடிப்படையற்ற சந்தேகங்கள் தேவையின்றி வெளியிடப்பட்டுள்ளன" என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.

உயர் நீதிமன்றங்களும், மற்ற கீழ் நீதிமன்றங்களும் வழக்கு விசாரணையிலும், தீர்ப்பிலும் அடிப்படையற்ற, மிகைப்படுத்தப்பட்ட கருத்துக்களை வெளியிடக்கூடாது என்று நீதிபதிகள் தங்களுடைய தீர்ப்பில் கூறியுள்ளனர். (பி.டி.ஐ.)

வெப்துனியாவைப் படிக்கவும்