கலாமிற்கு ஆதரவு இல்லை : சிவ சேனா!

Webdunia

புதன், 20 ஜூன் 2007 (14:40 IST)
குடியரசுத் தலைவர் தேர்தலில் 3-ம் அணியும், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியும் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை மீண்டும் போட்டியிடுவதற்கு ஆதரவளிக்க முன்வந்துள்ள நிலையில், அக்கூட்டணியில் உள்ள சிவ சேனா கலாமிற்கு ஆதரவளிக்க மறுத்துள்ளது!

சிவ சேனா கட்சியின் 41-ம் ஆண்டு விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் நிறுவனரான பால் தாக்கரே, குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை 2வது முறையாக குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதை சிவ சேனா விரும்பவில்லை என்று கூறினார்.

நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள மொஹம்மது அஃப்சல் குருவின் கருணை மனு மீது எவ்வித பதிலும் தராமல் கடந்த அக்டோபர் முதல் கிடப்பில் வைத்துள்ள அப்துல் கலாம், மீண்டும் குடியரசுத் தலைவராகத் தேர்வு செய்வதற்கு ஆதரவளிக்க முடியாது என்று பால் தாக்கரே கூறியுள்ளார்.

மொஹம்மது அப்சல் குருவின் கருணை மனு, உள்துறை அமைச்சர் ஷிவ்ராஜ் பட்டீலிடம் உள்ளது என்றால், அவ்வளவு காலத்திற்கு அங்கு இருக்க வேண்டிய காரணம் என்ன என்றும் பால் தாக்கரே வினவினார்.

இப்படிப்பட்ட தாமதங்கள் இருக்குமானால், குடியரசுத் தலைவர் என்கின்ற பதவி எதற்கு என்று கேள்வி எழுப்பினார் பால் தாக்கரே. (யு.என்.ஐ.)

வெப்துனியாவைப் படிக்கவும்