விமான ஊழியர் வேலை நிறுத்தம் : அமைச்சர் கடும் எச்சரிக்கை!

Webdunia

புதன், 13 ஜூன் 2007 (19:36 IST)
இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவன ஊழியர்கள் சட்டத்திற்குப் புறம்பான வேலை நிறுத்தத்தை இன்று மாலைக்குள் கைவிடாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரஃபுல் பட்டேல் எச்சரிக்கை விடுத்துள்ளார்!

ஏர் இந்தியா நிறுவனத்துடன் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் இணைக்கப்படவுள்ளதால் அதன் ஊழியர்கள் தங்களுக்கும் ஏர் இந்தியா நிறுவன ஊழியர்களுக்கு இணையாக ஊதியமும், பணி உயர்வும், 10 ஆண்டுக்கால ஊதிய பாக்கியையும் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இந்த கோரிக்கைகளின் மீது அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படததால் நேற்று இரவு முதல் இந்தியன் ஏர்லைன்ஸ் ஊழியர்களின் முக்கிய தொழிற்சங்கமான ஏ.சி.இ.யூ.வை சேர்ந்த ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் தொடர்ந்து விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய விமான போக்குவரத்து அமைச்சர் பிரஃபுல் பட்டேல், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவர்களில் 23 ஊழியர்களுக்கு இடைக்கால நீக்கத்திற்கான தாக்கீது அளிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

"வேலை நிறுத்தத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்பை பரிசீலனை செய்து வருகிறோம். இன்று மாலைக்குள் சட்டத்திற்குப் புறம்பான இந்த வேலை நிறுத்தத்தை கைவிடாவிட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று பிரஃபுல் பட்டேல் கூறியுள்ளார்.

இன்று இரவு வரை வேலை நிறுத்தம் நீடித்தால் நிறுவனத்தை மூடி லாக்அவுட் செய்யவும் அரசு திட்டமிட்டுள்ளதாக இந்தியன் ஏர்லைன்ஸ் நிர்வாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்தியன் ஏர்லைன்ஸ் ஊழியர்களுக்கு ஊதிய பாக்கிக்காக ரூ.267 கோடி பரிந்துரை செய்துள்ளதாகவும், வேலை நிறுத்தத்தை கைவிடாவிட்டால் அதனை மறுபரிசீலனை செய்யப் போவதாகவும் அமைச்சர் பிரஃபுல் பட்டேல் கூறியுள்ளார்.

12,000 ஊழியர்கள் ஈடுபட்டுள்ள இந்த வேலை நிறுத்தத்தால் உள்நாட்டு விமானப் போக்குவரத்து 40 விழுக்காடு அளவிற்கு பாதிக்கப்பட்டதாகவும், கேரளா, கொல்கட்டா, நாக்பூர், டெல்லி, சென்னை ஆகிய இடங்களுக்கிடையே பறக்கும் 13 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாகவும் செய்திகள் கூறுகின்றன. (பி.டி.ஐ.)

வெப்துனியாவைப் படிக்கவும்