ஊழியர்கள் வேலை நிறுத்தம் : உள்நாட்டு விமான சேவை பாதிப்பு

Webdunia

புதன், 13 ஜூன் 2007 (17:16 IST)
ஊதிய உயர்வு, பணி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தியன் ஏர்லைன்ஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் உள்நாட்டு விமான சேவைகள் கடும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளன!

மத்திய அரசின் ஏர் இந்தியா நிறுவனத்துடன் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் இணைக்கப்பட்டது. இந்தியன் ஏர்லைன்ஸ் ஊழியர்கள் சங்கம், தங்களுக்கு அளிக்கப்பட வேண்டிய ஊதிய உயர்வு, பணி உயர்வு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து ஏர் இந்தியா நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியது.

இந்த பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததையடுத்து நேற்று இரவு முதல் இண்டியன் ஏர்லைன்சின் முக்கிய தொழிற்சங்கமான ஏர் கார்ப்பரேஷன் எம்ப்ளாயிஸ் யூனியனைச் சேர்ந்த 15,000 ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

லோடர், கிளீனர், கேபின் குரூ, ஃபிரண்ட்லைன் ஸ்டாஃப் என்று அனைத்து துறை ஊழியர்களும் திடீரென்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. பல உள்நாட்டு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

நேற்று இரவு சென்னையில் இருந்து புறப்பட்டுச் செல்ல வேண்டிய சிங்கப்பூர் விமானம் இன்று காலை வரை புறப்படவில்லை. பல விமானங்கள் 30 முதல் 90 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றுள்ளன.

இந்த வேலை நிறுத்தம் தொடரும் என்று தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஊழியர் தொழிற்சங்கத்தின் பொதுச் செயலர் அருண் குமார், ஊழியர்களுக்கு கடந்த 10 ஆண்டு காலத்திற்கு தரவேண்டிய பாக்கியை இன்னமும் தரவில்லை என்றும், தங்களுக்கு ஏர் இந்தியா ஊழியர்களுக்கு இணையான பணி உயர்வையும், ஊதியத்தையும் அளிக்க நிர்வாகம் முன்வரவில்லை என்றும் கூறினார்.

10 ஆண்டு காலத்தில் 7 ஆண்டுகளுக்கு மட்டுமே ஊதிய பாக்கியை தருவதற்கு நிர்வாகம் ஒப்புக்கொண்டுள்ளது என்றும், அதனை ஏற்க மறுத்தே இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக அருண் குமார் கூறியுள்ளார். (யு.என்.ஐ.)

வெப்துனியாவைப் படிக்கவும்