இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் உருவாக்கி கடந்த மார்ச் 12 ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டு புவி மைய சுழற்சிப் பாதையில் சிறப்பாக செயல்பட்டு வரும் இன்சாட்-4பி செயற்கைக்கோளை குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் நாட்டிற்கு அர்ப்பணித்தார்!
இந்த செயற்கைக்கோளை இயக்கும் கர்நாடக மாநிலம் ஹாசனில் உள்ள இஸ்ரோ மையத்தில் இன்று நடந்த விழாவில் செயற்கைக்கோளை நாட்டிற்கு அர்ப்பணித்து உரையாற்றிய கலாம், மானுடத்தின் மேம்பாட்டிற்கு பயனளிக்கும் செயற்கைக்கோள்களை உருவாக்க வேண்டும் என்று விஞ்ஞானிகளைக் கேட்டுக் கொண்டார்.
அனைவரும் அறிவைப் பெற உதவும் வகையில் விண் தொழில்நுட்பம் வளர வேண்டும் என்று கேட்டுக் கொண்ட அப்துல் கலாம், கல்விக்காக இந்தியா அனுப்பி வைத்த எஜூசாட் செயற்கைக்கோள் வாயிலாக நமது நாட்டின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் அறிவு கொண்டு செல்லப்பட்டதை சுட்டிக் காட்டினார்.
ஐரோபபோவிலோ அல்லது வட அமெரிக்காவிலோ உள்ள முன்னேறிய நகரில் கிடைக்கும் கல்வி அறிவை ஆப்ரி்க்காவிலோ அல்லது ஆசியாவிலோ உள்ள தொலைதூர கிராமத்தில் படிக்கும் மாணவன் அறிந்துகொள்ள விண் தொழில்நுட்பம் உதவட்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இதேபோல, உலக உடல் நல காப்பிற்கு உபயோகப்படும் செயற்கைக்கோளையும் செலுத்த வேண்டும் என்று கலாம் கேட்டுக் கொண்டார்.
இந்தியா அனுப்பிய இன்சாட்-4பி செயற்கைக்கோள் 12 கூ பேண்ட், 12 சி பேண்ட் ஒளிபரப்பிகளைக் கொண்டதாகும்.
இந்நிகழ்ச்சியில் இந்தியாவின் குறிப்பிடத்தக்க விண்வெளி ஆராய்ச்சி விஞ்ஞானி யு.ஆர். ராவ் வாழ்நாள் சாதனையாளர் விருதளிக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டார். விருதுடன் அவருக்கு ரூ.20 லட்சம் ரொக்கப் பரிசையும் கலாம் வழங்கினார்.
ராவ் இதுமட்டுமின்றி, விண்வெளி விஞ்ஞானிகள் என். பந்த், எஸ்.சி. குப்தா, ஈ.வி. சிட்னிஸ், பி.என். சுரேஷ், பி.எஸ். கோயல் ஆகிய 5 பேருக்கு சிறந்த சாதனைகளுக்கான விருதுடன் தலா ரூ.10 லட்சம் ரொக்கப் பரிசையும் கலாம் வழங்கினார்.
இவர்கள் மட்டுமின்றி, 5 விஞ்ஞானிகளுக்கு சீரிய செயலாக்க விருதும், அத்துடன் தலா ரூ.5 லட்சம் ரொக்கப் பரிசும், 17 இளம் விஞ்ஞானிகளுக்கு திறன் விருதும், தலா ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசும் கலாம் வழங்கி சிறப்பித்தார்.