123 ஒப்பந்தம் : இடைவெளி நீடிக்கிறது - அனில் ககோட்கர்!

Webdunia

வெள்ளி, 8 ஜூன் 2007 (19:38 IST)
இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நடைமுறைக்கு கொண்டுவரும் 123 ஒப்பந்தத்தை உருவாக்குவது தொடர்பாக நடந்துவரும் பேச்சுவார்த்தையில் இன்னமும் இடைவெளி நீடிக்கிறது என்று இந்திய அணு சக்தி துறையின் செயலரும், விஞ்ஞானியுமான அனில் ககோட்கர் கூறியுள்ளார்!

ஆந்திர தலைநகர் ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ககோட்கர், இந்தியாவின் அணு சக்தி திட்டத்தை பாதிக்கும் எந்த ஒப்பந்தத்தையும் ஏற்க முடியாது என்று கூறினார்.

வாஷிங்டனுடன் 123 ஒப்பந்தம் தொடர்பாக நடந்துவரும் பேச்சுவார்த்தையில் இந்தியாவின் நலன்களை பாதுகாப்பதே முக்கியமானது என்று கூறிய ககோட்கர், இந்தியா, அமெரிக்கா இடையிலான இடைவெளியே அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதில் பெரும் தடையாக உள்ளது என்றும், அந்த இடைவெளியை குறைப்பது எப்படி என்று பேசி வருகிறோம் என்று கூறினார்.

அணு சக்தியை பொறுத்தவரை இந்தியா மிக வளர்ச்சியடைந்த நிலையில் உள்ளது என்றும், அணு மின் நிலையங்களை உருவாக்குவதற்கான செலவு அதிகமாகிவிடக் கூடாது என்று கூறிய ககோட்கர், மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் நாம் நமது நாட்டில் கட்டியுள்ள அணு மின் நிலையங்களின் மூலதனச் செலவு மிகக் குறைவானது என்று கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்