குஜ்ஜார் போராட்டம் முடிவிற்கு வந்தது! பேச்சுவார்த்தையில் உடன்பாடு!

தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கோரி கடந்த ஒரு வார காலமாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட குஜ்ஜார் வகுப்பினர், ராஜஸ்தான் முதலமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்துள்ளனர்!

குஜ்ஜார் இட ஒதுக்கீடு போராட்டக் குழுவின் தலைவரான கர்னல் கிரோரி சிங் பைன்ஸ்லா தலைமையிலான 11 பேர் குழுவினருடன் ராஜஸ்தான் முதலமைச்சர் வசுந்தரா ராஜி சிந்தியா நடத்திய பேச்சுவார்த்தையில் சற்றுமுன் உடன்பாடு ஏற்பட்டது.

குஜ்ஜார் சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பது தொடர்பாக ஆராய்வதற்கு உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான 3 பேர் ஆய்வுக் குழு அமைக்கப்படும் என்றும், அந்தக் குழு 3 மாதத்தில் தனது அறிக்கையை (பரிந்துரையை) அரசிற்கு வழங்கும் என்றும், அதன் அடிப்படையில் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று ராஜஸ்தான் முதலமைச்சர் உறுதியளித்ததை அடுத்து உடன்பாடு ஏற்பட்டது.

பேச்சுவார்த்தைக்குப் பிறகு முதலமைச்சர் வசுந்தராவும், கர்னல் கிரோரி சிங் பைன்ஸ்லாவும் செய்தியாளர்களைச் சந்தித்து உடன்பாடு ஏற்பட்டதையும், போராட்டம் விலக்கிக்கொள்ளப்படுவதையும் அறிவித்தனர்.

"நாங்கள் எதற்காகப் போராடினோமோ அது கிடைத்துவிட்டது. எங்களுடைய போராட்டத்தால் ஏற்பட்ட சிரமங்களுக்கு வருந்துகிறோம்" என்று குஜ்ஜார் தலைவர் கிரோரி சிங் பைன்ஸ்லா கூறினார்.

மே 29 ஆம் தேதி குஜ்ஜார்கள் நடத்திய சாலை மறியலின் போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் கொல்லப்பட்டனர். அதனைத் தொடர்ந்து ராஜஸ்தானில் பல இடங்களில் நடந்த கலவரத்தில் மேலும் பலர் உயிரிழந்தனர். இந்த ஒரு வார போராட்டத்தில் 26 பேர் உயிரிழந்தனர்.

இன்று டெல்லியில் நடந்த கடையடைப்பின் போது 2 பேருந்துகளுக்குத் தீ வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. (ஏ.என்.ஐ.)

வெப்துனியாவைப் படிக்கவும்