மீனவர்களைக் காக்க மத்திய, மாநில கூட்டுக் கடல் கண்காணிப்பு!

சிறிலங்க கடற்படையினர் இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி புகுந்து தமிழக மீனவர்களைத் தாக்கி வருவதை தடுத்து நிறுத்த மத்திய கடலோர காவற்படையுடன் தமிழக காவல் துறையும் இணைந்து கடல் கண்காணிப்பில் ஈடுபடும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது!

தமிழக மீனவர்கள் மீது சிறிலங்க கடற்படையினர் அத்துமீறி நடத்திய தாக்குதல்களில் இதுவரை 300க்கும் மேற்பட்ட மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கான மீனவர்கள் காயமுற்றுள்ளனர். தமிழக மீனவர்களை சிறிலங்க கடற்படையினர் தாக்கி வருவதை தடுத்து நிறுத்துவது குறித்து பிரதமருக்கு பலமுறை முதலமைச்சர் கருணாநிதி கடிதம் எழுதினார்.

இந்த நிலையில், நேற்று பிரதமரைச் சந்தித்த தமிழக முதலமைச்சர், மீனவர்கள் மீது நடத்தப்பட்டு வரும் தாக்குதல்களை தடுத்து நிறுத்துவது குறித்துப் பேசினார். இதுகுறித்து தேச பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணனுடன் பேசுமாறு முதலமைச்சரை பிரதமர் கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து இன்று காலை தமிழக முதலமைச்சர் கருணாநிதியை தேச பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் சந்தித்து மீனவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் குறித்து விவாதித்தார்.

30 நிமிட நேரம் நடந்த இந்த சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நாராயணன், தமிழக மீனவர்களைக் காக்க இந்திய கடலோரக் காவற்படையுடன் இணைந்து தமிழக காவல் துறையும் கூட்டு கண்காணிப்பில் ஈடுபடும் என்று செய்தியாளர்களிடம் கூறினார்.

மீனவர்கள் மீது சிறிலங்க கடற்படை நடத்திவரும் தாக்குதலைப் பயன்படுத்தி இந்திய - இலங்கை கடல் எல்லையில் கூட்டு கண்காணிப்பை நடத்த வேண்டும் என்று சிறிலங்க அரசு கோரிக்கை விடுத்திருந்தது. அதற்கு தமிழ்நாட்டில் இருந்து கடும் எதிர்ப்பு உருவானது.

இந்த நிலையில், தமிழக மீனவர்களைக் காக்க மத்திய, மாநில அரசுகள் கூட்டு கடல் கண்காணிப்பை மேற்கொள்ள முடிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்