பள்ளிப் படிப்பை பாதியில் விட்டவர்கள், ஐ.டி.ஐ. போன்ற தொழில்நுட்ப கல்வி பயின்ற மற்றும் தொழிற்சாலைகளில் பணியாற்றிவரும் தொழிலாளர்கள் ஆகியோரின் திறமைகளை மேம்படுத்துவதற்கு தனி மையங்களை உருவாக்கி திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கும் திட்டத்திற்கு ரூ.550 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது!
தலைநகர் டெல்லியில் இன்று பிரதமர் தலைமையில் நடந்த பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு இத்திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியது.
மத்திய அரசால் 100 விழுக்காடு நிதி ஆதரவுடன் ஒவ்வொரு மாநிலத்திலும் திறன் மேம்பாட்டு மையங்கள் நிறுவப்படும். இத்திட்டத்தின் கீழ் உருவாக்கப்படும் மையங்களில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி பெறுபவர்களுக்கு தனி சான்றிதழ் அளிக்கப்படும்.
இத்திட்டத்தின் கீழ் மாநில அரசுகளும், பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களும், தொழிலகங்களும் மத்திய அரசுத் துறைகளும் நடத்தும் விடுமுறைக் கால தொழில் பயிற்சிகளுக்கும் நிதியுதவி அளிக்கப்படும்.
இத்திட்டத்தின் கீழ் 1896 அரசு ஐ.டி.ஐ.கள், 3218 தனியார் ஐ.டி.சி.க்கள் ஆகியன பயன்பெறும்.
5 ஆண்டுகளில் இத்திட்டத்தின் கீழ் 10 லட்சம் பேர் திறன் மேம்பாட்டுப் பயிற்சி பெறுவார்கள். இத்திட்டத்தில் இணைய குறைந்தபட்ச வயது வரம்பு 15 ஆகும். அதிகபட்ச வயது வரம்பு ஏதுமில்லை.