தொழிற்சாலைகள் அனைத்தும் சமூக அக்கறையுடன் செயல்பட வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.
புதுடெல்லியில் இன்று நடைபெற்ற சிஐஐ அமைப்பின் ஆண்டுப் பொதுக் கூட்டத்திற்கு தலைமை வகித்து பிரதமர் பேசினார்.
அப்போது, தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்களின் நலன் பாதுகாக்கப்பட வேண்டும். அவர்களது பணியாற்றும் சூழல் வசதி கொண்டதாக இருக்க வேண்டும் என்று கூறினார் பிரதமர்.
விலைவாசி உயர்வினால் ஏழை மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதனால் தொழிற்சாலைகள் தங்களது உற்பத்திப் பொருட்களின் விலை நிர்ணயத்தில் மிகுந்த கவனம் கொள்ள வேண்டும். வரி செலுத்தியதும் தங்களது பொறுப்பு முடிந்துவிட்டதாக எண்ணிக் கொள்ளக் கூடாது. தங்களது முழு செயலிலும் சமூக அக்கறையை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.
அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் : பேச்சுவார்த்தையில் மேலும் முன்னேற்றம்!
இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பை உறுதி செய்யும் 123 ஒப்பந்தத்தை உருவாக்க இந்திய, அமெரிக்க அதிகாரிகளுக்கு இடையே லண்டனில் நடந்த பேச்சவார்த்தையில் மேலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அயலுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது!
டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அயலுறவு அமைச்சகப் பேச்சாளர் நவ்ஜேத் சார்ணா, 123 ஒப்பந்தம் உருவாக்குவது தொடர்பாக சில கருத்து பரிமாற்றங்கள் நடந்ததாகவும், இந்த 2 நாள் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார்.
ஆயினும், இன்னமும் ஒப்பந்தம் உருவாக்குவது தொடர்பாக இடைவெளி உள்ளதெனவும், அதனை இனி நடைபெறும் பேச்சுவார்த்தைகளில் நிறைவு செய்ய முயற்சிக்கப்படும் என்று கூறினார்.
இந்தப் பேச்சுவார்த்தையில் இந்திய-அமெரிக்க அணு சக்தி துறைகளைச் சேர்ந்த முக்கிய அதிகாரிகள் கலந்துகொண்டதாக நவ்ஜேத் சார்ணா கூறினார்.