விவசாயிகளை காப்பாற்ற சிறப்புத் திட்டம் : பிரதமர் அறிவிப்பு!

கடன் சுமை உள்ளிட்ட நமது நாட்டின் விவசாயிகள் சந்தித்து வரும் அழுத்தமான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் விவசாயிகள் கொள்கை விரைவில் அறிவிக்கப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்!

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் மூன்றாண்டு கால சாதனைகளை விளக்கும் அறிக்கையை ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி வெளியிட்டார்.

இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மன்மோகன் சிங், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் பல்வேறு சாதனைகளை எடுத்துரைத்தார்.

நமது நாட்டின் விவசாயிகள் சந்தித்து வரும் முக்கியப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையிலும், விவசாயிகளின் வாழ்வை மேம்படுத்தக் கூடிய ஒரு சிறப்புக் கொள்கை விரைவில் வெளியிடப்படும் என்று கூறினார்.

அத்தியவாசிய பொருட்களின் விலைவாசிகளைக் கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது என்று கூறிய பிரதமர், பண வீக்கத்தை கட்டுக்குள் வைத்திருக்க முன்னுரிமை அளித்து தமது அரசு செயல்பட்டு வருவதாகக் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ், கப்பல் போக்குவரத்து அமைச்சர் டி.ஆர். பாலு, உணவு அமைச்சர் சரத் பவார், மத்திய ரசாயனத் துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்