ஹைதராபாத்தில் உள்ள மெக்கா மசூதியில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் வெடிக்கப்படாத வெடிகுண்டு இணைக்கப்பட்ட செல்போனின் சிம் கார்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குண்டு வெடிப்புக்கு காரணமான பயங்கரவாதி அடையாளமும் தெரிந்துள்ளது!
ஹைதராபாத் நகரில் உள்ள புகழ்பெற்ற மெக்கா மசூதியில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த குண்டு வெடிப்பில் 11 பேர் பலியானார்கள். மேலும் சுமார் 60 பேர் காயம் அடைந்தனர். குண்டு வெடிப்பை தொடர்ந்து நடந்த கலவரத்தை அடக்க காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியதில் 5 பேர் உயிர் இழந்தனர்.
நாட்டில் மதக்கலவரத்தை தூண்டும் நோக்கத்தில் வழிபாட்டு தலங்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று புலனாய்வு துறை அமைப்புகளுக்கு ஏற்கனவே தகவல் கிடைத்து இருந்தது. அதை உறுதிப்படுத்தும் வகையில் இந்த குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது.
ஹைதராபாத் மசூதியில் வெடித்தது செல்போன் குண்டு என தெரிய வந்து உள்ளது. மசூதியில் மொத்தம் 4 செல்போன் குண்டுகள் வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒரு குண்டு மட்டுமே வெடித்தது. மற்ற 3 குண்டுகளும் வெடிக்கவில்லை.
குண்டு வெடித்த சிறிது நேரத்தில் காவல்துறையினரும் தடயவியல் நிபுணர்களும் மசூதிக்குள் சென்று சோதனை நடத்திய போது வெடிக்காத 2 செல்போன் குண்டுகளையும் அவர்கள் கண்டுபிடித்ததனர். பின்னர் ஒரு குண்டு கண்டுபிடிக்கப்பட்டது.
இவற்றில் சிறிய பைப் வடிவிலான சக்திவாய்ந்த 2 குண்டுகள் ஒரு செல்போனுடன் இணைக்கப்பட்டு இருந்தன. செல்போனுக்கு அழைப்பு வந்ததும் வெடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருந்த அந்த குண்டுகள் மசூதியின் வாசல் பகுதியில் வைக்கப்பட்டு இருந்தன. அந்த குண்டுகளும் வெடித்து இருந்தால் உயிர்ச்சேதம் அதிகமாக இருந்திருக்கும். ஆனால் நல்லவேளையாக அந்த குண்டுகள் வெடிக்கும் முன்பே செயலிழக்கச் செய்யப்பட்டன.
வெடிக்காத குண்டுகளுடன் கூடிய செல்போனில் இருந்த `சிம்‘ கார்டை நிபுணர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள். அந்த `சிம்‘ கார்டு மேற்கு வங்காளத்தில் வாங்கப்பட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது.
காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில் இந்த குண்டு வெடிப்பு சதியின் பின்னணியில் முகமது அப்துல் சாகீத் என்ற பிலால் என்ற தீவரவாதி இருப்பதாக தெரிய வந்து உள்ளது.
ஹைதராபாத் நகரைச் சேர்ந்த இவன், வங்கதேசத்தில் இயங்கி வரும் ஹர்கத்-உல்-ஜிகாத்-அல்-இஸ்லாமி என்ற பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்தவன். பாகிஸ்தான் தீவிரவாத இயக்கங்களான ஜெய்ஸ்-இ-முகமது, லஸ்கர்-இ-தொய்பா ஆகிய இயக்கங்களுடனும் இவனுக்கு தொடர்பு உண்டு என்று ஆந்திர மாநில காவல்துறையினர் தெரிவித்தனர்.