தினகரன் அலுவலகம் மீது தாக்குதல் : திமுக - அதிமுக மோதலால் மாநிலங்களவை தள்ளிவைப்பு!

மதுரையில் தினகரன் நாளிதழ் அலுவலகம் மீது நடந்த தாக்குதல் குறித்து அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர் பேச அனுமதி அளித்ததற்கு தி.மு.க. உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து எழுந்த அமளியால் மாநிலங்களவை நடவடிக்கைகள் தள்ளிவைக்கப்பட்டது!

இன்று காலை கேள்வி நேரம் முடிந்ததும் மாநிலங்களவைத் தலைவர் அளித்த அனுமதியை அடுத்து பேச எழுந்த அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர் பி.ஜே. நாராயணன் மதுரையில் தினகரன் அலுவலகம் மீது நடந்த தாக்குதல் குறித்து பேச ஆரம்பித்தார். அதற்கு அரசு தலைமைக் கொறடா நாராயணசாமியும் மத்திய நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சர் டி.ஆர். பாலுவும் மற்ற தி.மு.க. உறுப்பினர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அவர்களை எதிர்த்து முழக்கமிட்ட அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர்கள் அவையின் மையப் பகுதிக்கு வந்து அமைச்சர் பாலுவை நோக்கி பேசினர். அப்பொழுது குறுக்கிட்ட அவை துணைத் தலைவர் ரஹ்மான் கான் அவர்களை தங்களுடைய இருக்கைக்குத் திரும்புமாறு கேட்டுக் கொண்டார்.

மதுரை தினகரன் அலுவலகம் தாக்குதல் தொடர்பான பிரச்சனை குறித்துப் பேச அ.இ.அ.தி.மு.க. சார்பாக அளிக்கப்பட்ட விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டு 5 நிமிட நேரம் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக ரஹ்மான் கான் கூறினார்.

அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர் நாராயணன் பேச எழுந்ததும் அமைச்சர் பாலுவும் மற்றவர்களும் எதிர்த்து குரல் எழுப்ப அவையில் மீண்டும் கூச்சலும் குழப்பமும் நிலவியது. இதனைத் தொடர்ந்து அவை நடவடிக்கைகளை பிற்பகல் 2 மணி வரை தள்ளிவைப்பதாக அவை துணைத் தலைவர் ரஹ்மான் கான் அறிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்