இலங்கை மீது சர்வதேச விசாரணை - அமெரிக்க செனட்டர்கள் வலியுறுத்தல்
வியாழன், 31 ஜனவரி 2013 (09:48 IST)
FILE
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் குறித்து ஒழுங்குமுறையான செயற்பாடுகளில் இலங்கை அரசாங்கம் கரிசனை காட்டத் தவறியதைச் சுட்டிக்காட்டி அந்தக் குற்றங்கள் குறித்த சர்வதேச விசாரணையொன்று நடத்தப்பட வேண்டுமென்று அமெரிக்க செனட்சபை உறுப்பினர்கள் இருவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் ஜனநாயகக் கட்சியின் பிரபல கொள்கை வகுப்பாளர்களான பற்றிக் லீஹி மற்றும் பொப் கசே ஆகிய இருவரும் இது குறித்து தெரிவிக்கையில், இலங்கை அரசானது தன்னால் உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த தவறியுள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளனர்.
இலங்கை அரசாங்கம் மேற்படி பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த தவறி வருவதால் இலங்கையில் மனித மற்றும் அரசியல் உரிமைகள் ஆகியவற்றைப் பேணும் மனோபாவம் உண்மையில் மிகவும் மோசமடைந்து வருவதனையே அது உணர்த்துகின்றது எனவும் பதவி விலகிச் செல்லும் இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்டனுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதமொன்றில் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அதில் அவர்கள் இருவரும் மேலும் கூறுகையில், அதிபர் மகிந்த ராஜபக்சவின் பின்புலத்துடன் அண்மையில் தலைமை நீதிபதி மீதான குற்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்ட விதம் குறித்து எமது கடும் விசனத்தை வெளிப்படுத்தும் அதேவேளை, இலங்கையில் ஊடக செயற்பாடுகளுக்கு அதிகாரிகளால் விடுக்கப்பட்டு வரும் அச்சுறுத்தல்கள் குறித்து மனித உரிமை ஆர்வலர்களால் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்தும் நாம் கரிசனை கொண்டுள்ளோம்.
அத்துடன் இலங்கையின் நல்லிணக்கம் மற்றும் நிலையானதோர் மத்தியத்துவத்திற்கும் பொறுப்புக்கூறும் கடப்பாடானது முன்னோடித் தேவையானதொன்றாகும். இத்தகைய சூழ்நிலையில் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் செயல்முறைக்கு அரசின் அசமந்தப் போக்கின் மூலம் சேறு பூசப்பட்டு விட்டதாகவே நாம் கருதுகின்றோம் என்பதுடன், சுயாதீனமான சர்வதேச விசாரணையொன்றே உண்மையான பொறுப்புக்கூறும் கடப்பாட்டை இலங்கை அரசின் மீது ஏற்படுத்தும்.
கடந்த 2009ம் ஆண்டில் தமிழீழ விடுதலைப்புலிகளுடனான இறுதி யுத்தத்தின் போது இலங்கை அரசுப்படைகள் சுமார் 40 ஆயிரம் அப்பாவிப் பொதுமக்களைக் கொன்றொழித்ததாக குற்றஞ்சாட்டப்படடிருந்த நிலையில் இலங்கை அரசு அதனை மறுத்ததுடன், தனக்கெதிரான சர்வதேச விசாரணைக் கோரிக்கையினையும் நிராகரித்திருந்தமை தெரிந்ததே.
இலங்கையில் சர்வதேச விசாரணையொன்று நடத்தப்பட வேண்டும் என்ற மனித உரிமை குழுக்களுக்கான ஆதரவை ஒபாமா நிருவாகம் குறைத்துக் கொண்டுள்ள போதிலும் மகிந்த ராஜபக்ச அரசின் நடவடிக்கைகளில் அது படிப்படியாக பொறுமையை இழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கைக்கு அண்மையில் விஜயம் மேற்கொண்டிருந்த அமெரிக்க அதிகாரிகள் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஜெனிவா மாநாட்டின் போது இலங்கை எதிராக இரண்டாவது தடவையாகவும் தீர்மானம் கொண்டுவரப்படும் என கடந்த 28ஆம் தேதி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.