பேஸ்புக் இணையதளத்தைப் பார்க்க மகள்களுக்குத் தடை விதித்த ஒபாமா

ஞாயிறு, 18 டிசம்பர் 2011 (12:21 IST)
தனது குடும்பத்தினரின் விவரங்களையும், அவர்களின் செயல்பாடுகள் குறித்து யாரும் அறிந்து கொள்ள தான் விரும்பவில்லை என்ற காரணத்தினால் அமெரிக்க அதிபர் ஒபாமா பேஸ்புக் இணையதளத்தை தனது மகள்கள் பார்க்கத் தடை விதித்தார்.

அமெரிக்க அதிபர் ஒபாமா கடந்த 2008-ம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிட்டார். அப்போது தனது தேர்தல் பிரசாரத்துக்கு ‘பேஸ்புக்’ இணைய தளத்தை பயன்படுத்தினார்.அதன் மூலம் பிரசாரம் செய்து மக்களை கவர்ந்த அவர் அமோக வெற்றி பெற்றார். இதன் மூலம் இணைய தளத்தில் பிரசாரம் செய்து அதிபரானவர் என்ற பெருமையை பெற்றார்.

ஆனால் அவர் தனது மகள்கள் ‘பேஸ்புக்’ இணையதளத்தில் உறுப்பினராகி அதை பயன்படுத்த தடை விதித்துள்ளதாக லண்டனில் இருந்து வெளிவரும் ஒரு பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

ஒபாமா மூத்த மகள் மாலியா. அவருக்கு 13 வயது ஆகிறது. இளைய மகள் சாஷா. இவருக்கு 10 வயது ஆகிறது. பேஷ்புக் போன்ற இணைய தளங்களை பயன்படுத்தும் வயது பக்குவம் அவர்களுக்கு இன்னும் வரவில்லை. அத்துடன் தனது குடும்பத்தினரின் விவரங்களையும், அவர்களின் செயல்பாடுகள் குறித்து யாரும் அறிந்து கொள்ள அவர் விரும்பவில்லை என்று அதில் அவர் தெரிவித்துள்ளார்.

பேஸ்புக் போன்ற சமூக இணைய தளத்தை பயன்படுத்தும் பக்குவம், வயது வராததால் இன்னும் 4 ஆண்டுகள் கழித்து அவர்கள் அதில் சேர்ந்து தங்களின் வெளியுலக தொடர்பை ஏற்படுத்தி கொள்ளலாம் என்று ஒபாமா கூறியுள்ளார்.

பேஸ்புக் இணைய தளத்தில் அதிபர் ஒபாமா உறுப்பினராக உள்ளார். அவரது பக்கத்தில் 2 கோடியே 40 லட்சம் மக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்