இலங்கை அதிபர் ராஜபக்ச ரஷ்யா பயணம்

வியாழன், 16 ஜூன் 2011 (13:13 IST)
ரஷ்யாவில் நடைபெறும் சர்வதேச பொருளாதார மன்ற மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இலங்கை அதிபர் ராஜபக்ச இன்று ரஷ்யாவுக்குப் பயணமாகிறார்.

‘புதிய யுகத்தை நோக்கி எழுச்சி பெறும் தலைமைத்துவம்’ என்ற தொனியில் நடைபெறவுள்ள இம்மாநாடு இன்று தொடங்கி மூன்று நாட்கள், ரஷ்யாவின் செயின்ட்பீட்டர்ஸ்பர்க் நகரில் நடைபெறவுள்ளது.

ரஷ்யா, சீனா, ஸ்பெயின், பின்லாந்து உட்பட பல நாடுகள் இப்பொருளாதார மன்றத்தில் அங்கம் வகிக்கின்றன.

இம்மாநாட்டில் இலங்கை பங்கேற்கும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். மேற்படி மாநாட்டில் ராஜபக்சவுடன், இலங்கை அயலுறவுத் துறை அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.

மாநாடு முடிவடைந்த பின்னர்,ரஷ்யத் தலைவர்களையும் சந்திக்கவுள்ள ராஜபகச, ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை விடயத்தில் ரஷ்யா வழங்கிய ஆதரவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதுடன், எதிர்காலத்தில் தொடர்ந்தும் ரஷ்ய ஆதரவு தொடர்பாக கோரிக்கை விடுப்பார் என்றும் தெரிய வருகின்றது.

வெப்துனியாவைப் படிக்கவும்