இந்தியா ஒரு பொறுப்புமிக்க சர்வதேச சக்தியாக உருவெடுத்து வருகிறது: ஒபாமா

வெள்ளி, 4 ஜூன் 2010 (13:04 IST)
இந்தியா ஒரு பொறுப்புமிக்க சர்வதேச சக்தியாக உருவெடுத்து வருகிறது என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறியுள்ளார்.

அமெரிக்கா வந்துள்ள இந்திய அயலுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவுக்கு நேற்று அமெரிக்க அயலுறவுத் துறை அமைச்சர் ஹில்லாரி கிளின்டன் அளித்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசுகையில் மேற்கண்டவாறு கூறிய ஒபாமா, 21 ஆம் நூற்றாண்டில் இந்தியா - அமெரிக்கா இடையேயான உறவு மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கும் என்றார்.

இந்தியா வரைபடத்தில் எங்கு உள்ளது என்பதை அடிப்படையாகக் கொண்டு அமெரிக்கா தனது தோழமை நாட்டை மதிப்பீடு செய்வதில்லை என்றும், நாங்கள் என்ன பகிர்ந்து கொண்டோம் மற்றும் எங்கே நாங்கள் ஒன்றாக செல்ல முடிகிறது என்பதை அடிப்படையாகக் கொண்டே அதனை தீர்மானிக்கிறோம் என்றும் ஒபாமா கூறினார்.

அனைத்து நாடுகளின் எதிர்கால பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கு இந்தியா ஒரு முக்கியமான நாடாக திகழ்கிறது. அதனால்தான் எனது அமைச்சரவையில் மூன்றாம் இடத்தில் உள்ளவர் ஏற்கனவே இந்தியாவுக்கு சென்றுள்ளார்.

அதே காரணத்தால்ன் எனது நிர்வாகத்தில் உள்ள அதிகாரிகளும் தற்போது நடைபெற உள்ள முக்கியமான பேச்சுவார்த்தையில் இடம்பெற்றுள்ளனர் என்று ஒபாமா மேலும் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்