9 மாதங்களுக்குப் பின்னர் மன்மோகன் - கிலானி சந்திப்பு

வியாழன், 29 ஏப்ரல் 2010 (16:50 IST)
சுமார் 9 மாத இடைவெளிக்குப் பின்னர் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கும், பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸா கிலானியும் இன்று நேரில் சந்தித்துப் பேசினர்.

பூடான் தலைநகர் திம்புவில் நடைபெற்று வரும் 16 ஆவது "சார்க்" உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வந்த இரு தலைவர்களும் இன்று நேரில் சந்தித்துப் பேசினார்கள்.

ஏற்கனவே திட்டமிட்டிருந்த நேரத்திற்கு சுமார் 40 நிமிடங்கள் தாமதமாக இந்த சந்திப்பு நடைபெற்றது.

இரு தலைவர்களும் கைகுலுக்கியபடியே பரஸ்பரம் வாழ்த்துக்களை தெரிவித்து ஊடகங்களின் புகைப்படக்காரர்களுக்கு "போஸ்" கொடுத்தனர்.

அதனைத் தொடர்ந்து சந்திப்புக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அறைக்கு சென்ற அவர்கள், சுமார் 50 நிமிடங்கள் பேச்சு நடத்தினர்.

அப்போது, மும்பை தாக்குதலுக்கு காரணமான பாகிஸ்தானிலுள்ள குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிலானியை மன்மோகன் வலியுறுத்தியதாக தெரிகிறது.

மேலும் மும்பை தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தானில் நடைபெற்று வரும் விசாரணையின் தற்போதைய நிலவரம் குறித்த விவரங்களையும் மன்மோகன் கேட்டறிந்ததாக கூறப்படுகிறது.

இந்த சந்திப்பின்போது மன்மோகன் சிங்குடன் சென்ற இந்தியப் பிரதிநிதிகளான அயலுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன், அயலுறவுத் துறைச் செயலர் நிருபமா ராவ் ஆகியோரும், அதேப்போன்று பாகிஸ்தான் பிரதிநிதிகளான அயலுறவுத் துறை அமைச்சர் ஷா முகமத் குரேஷி, அயலுறவுத் துறைச் செயலர் சல்மான் பஷீர் உள்ளிட்ட்டவர்களும் கலந்துகொண்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்