சார்க் மண்டல ஒத்துழைப்பு முழுமை பெறவில்லை: மன்மோகன் சிங்
வியாழன், 29 ஏப்ரல் 2010 (12:50 IST)
தெற்காசிய மண்டல ஒத்துழைப்பு மாநாடு (சார்க்) துவங்கி கால் நூற்றாண்டுக் காலம் ஆகிவிட்ட நிலையிலும், சார்க் நாடுகளுக்கிடையிலான மண்டல ஒத்துழைப்பு அரைக் கிணற்றைத்தான் தாண்டியுள்ளது என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
16வது சார்க் மாநாடு பூட்டான் தலைநகர் திம்புவில் இன்று துவங்கியது. இம்மாநாட்டில் துவக்கவுரையாற்றிய பிரதமர் மன்மோகன் சிங், “சார்க் நாடுகளுக்கிடையிலான மண்டல ஒத்துழைப்பு, மண்டல மேம்பாடு, மண்டல ஒருங்கிணைப்பு ஆகியவற்றில் அரைக் கிணற்றைத்தான் தாண்டியுள்ளோம் என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். சார்க் நாடுகளுக்கும் மற்ற நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகமும், போக்குவரத்தும், தகவல் தொடர்பும் மேம்பட்டுள்ளது. ஆயினும், சார்க் நாடுகளுக்கு இடையிலான வர்ததகம், முதலீடு என்பது தெற்காசிய வர்த்தக அளவுடன் ஒப்பிட்டால் மிக மிக குறைவாகவே உள்ளது. நமது திறன்களோடு ஒப்பிடுகையில் இது மிகக் குறைவாக உள்ளது” என்று கூறியுள்ளார்.
முன்னதாக சார்க் நாடுகளின் தலைவர்கள் வெளியிட்ட கூட்டறிக்கையில் பயங்கரவாதத்திற்கு எதிரான கூட்டு நடவடிக்கைக்கு உறுதி கூறப்பட்டுள்ளது.