பூட்டானில் மன்மோகன் சிங் - கிலானி நாளை சந்திப்பு

புதன், 28 ஏப்ரல் 2010 (16:23 IST)
பூட்டானில் சார்க் மாநாட்டில் கலந்து கொண்டுள்ள இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கும், பாகிஸ்தான் பிரதமர் யூசுஃப் ரஸா கிலானியும் நாளை சந்திக்கின்றனர்.

இந்தச் சந்திப்பின் போது மும்பை பயங்கரவாதக் தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் நடவடிக்கை போதவில்லை என்பதை பிரதமர் மன்மோகன் தெரிவிக்கலாம் என்று தெரிகிறது.

இதற்கு முன்னர் இருவரும் அமெரிக்காவில் நடைபெற்ற அணு ஆயுதப் பாதுகாப்பு உச்சி மாநாட்டில் கலந்து கோன்டனர்.

இந்தச் சந்திப்பின் போது இந்தியாவிம் மையமான கவலையாகக் கருதப்படும் எல்லை தாண்டிய பயங்கரவாதம் முக்கிய விவாதமாக அமையும் என்று இந்திய அரசுத் தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எல்லை தாண்டிய பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்த பாகிஸ்தான் மேற்கொண்ட நடவடிக்கைகள் போதவில்லை என்று இந்தியத் தரப்பில் தெரிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மும்பை பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக 7 பேரை பாகிஸ்தான் கைது செய்து விசாரித்து வருகிறது என்றாலும், அதனை தலைமையேற்று நடத்தியதாக சந்தேகிக்கப்படும் ஜமாத் உத் தவா அமைப்புத் தலைவர் ஹஃபீஸ் சயீத் சுதந்திரமாக வெளியே நடமாடுவது குறித்தும் இந்தியா தனது அதிருப்திகளை தொடர்ந்து வெளிட்டுக் கொண்டு வருகிறது.

பாகிஸ்தானுடன் அனைத்து தரப்பு உரையாடல்களையும் இந்தியா தொடங்க வேண்டுமானால் மும்பை தாக்குதலுக்கு தொடர்பானவர்கள் மீது பாகிஸ்தான் நம்பத்தகுந்த நடவடிக்கை மேற்கொள்வது ஒரு குறைந்தபட்ச தேவை என்பதை பிரதமர் மன்மோகன் சிங் சில நாட்களுக்கு முன் சுட்டிக்காட்டினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்