வடகொரியா விடுவிப்பு: அமெரிக்க பெண் செய்தியாளர்கள் நாடு திரும்பினர்

புதன், 5 ஆகஸ்ட் 2009 (20:43 IST)
வட கொரியாவால் விடுவிக்கப்பட்ட அமெரிக்காவின் இரு பெண் செய்தியாளர்களும் இன்று நாடு திரும்பினர்.

ஐ.நா. உத்தரவையும் மீறி வட கொரியா அணு ஆயுத சோதனையில் ஈடுபட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அமெரிக்க தொலைக்காட்சி ஒன்றின் பெண் செய்தியாளர்கள் யூனாலீ (36), லாரா லிங் (32) ஆகியோர் கடந்த மார்ச்சில் வடகொரியா எல்லைக்கு சென்றனர்.

இவர்கள் தங்களது நாட்டுக்குள் அத்துமீறி நுழைந்ததாக கூறி, வடகொரியா அரசு இருவரையும் கைது செய்தது. இரு பெண் செய்தியாளர்களுக்கும் 12 ஆண்டுகள் தண்டனை விதித்தது.

பெண் செய்தியாளர்களை விடுவிக்கும்படி, அமெரிக்கா பலமுறை கோரிக்கை விடுத்தும் வடகொரியா ஏற்கவில்லை.

இந்நிலையில், அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் திடீர் பயணமாக நேற்று வடகொரியா சென்றார். அப்போது, வடகொரிய அதிபர் கிம் ஜாங்கை சந்தித்து, பெண் செய்தியாளர்களை விடுவிக்கும்படி கோரினார்.

இதையேற்று, இரு பெண் செய்தியாளர்களுக்கும் பொது மன்னிப்பு அளித்த கிம் ஜாங், அவர்களை விடுதலை செய்ய உத்தரவிட்டார்.

இதையடுத்து இரு பெண் செய்தியாளர்களும், வட கொரியாவில் இருந்து கிளிண்டனுடன் விமானத்தில் புறப்பட்டு அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையம் வந்திறங்கினார். அவர்களை அமெரிக்க முன்னாள் துணை அதிபர் அல்கோர் உள்ளிட்ட ஏராளமானோர் வரவேற்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்